போலி மருத்துவர் மீண்டும் கைது... டெங்கு பீதியில் காஞ்சிபுரம் மக்கள்! | Fake doctor arrested in kanchipuram

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (09/11/2018)

கடைசி தொடர்பு:18:30 (09/11/2018)

போலி மருத்துவர் மீண்டும் கைது... டெங்கு பீதியில் காஞ்சிபுரம் மக்கள்!

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரம் பகுதியில் போலி மருத்துவர் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். இவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்.

போலி மருத்துவர் கைது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஆயிரக்கணக்கான மக்கள் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். காய்ச்சல் தீவிரம் காரணமாக மருத்துவமனை உள்நோயாளியாகப் பெரும்பாலானவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். தீவிர காய்ச்சல் உள்ளவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருப்பதால் பெரும்பாலானவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லத் தொடங்கிவிட்டனர். இதைத்தொடர்ந்து போலி மருத்துவர்களும் காய்ச்சலுக்கு மருத்துவம் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். காய்ச்சலுக்குத் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழப்பும் அதிகரித்து வருகின்றது.

டெங்கு கொசு

இதனால் டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சலால் மக்கள் பீதியடைந்து இருக்கிறார்கள். போலி மருத்துவர்கள் அதிக அளவில் இருப்பதாகச் சுகாதாரத்துறைக்கு வந்த தகவலை அடுத்துக் கடந்த வருடம் செய்யூர், மதுராந்தகம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் போலி மருத்துவர்களைக் கைது செய்தனர். ஆனாலும், போலி மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவதாக இல்லை. காஞ்சிபுரம் குள்ளப்ப தெருவில் பி.எஸ்ஸி வேதியியல் படித்துவிட்டு மருத்துவம் செய்து வந்த போலி மருத்துவர் திருமலை என்பவரை மருத்துவப் பணிகள் இயக்குநர் ஜீவா அளித்த புகாரின் அடிப்படையில் சிவகாஞ்சி காவல்துறையினர் இன்று கைது செய்தனர். இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக மருத்துவர் எனக் கூறிக்கொண்டு மருத்துவம் பார்த்து வருகிறார். கடந்த 14.10.2017-ம் தேதி இவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

போலி மருத்துவர்கள் மீது தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கும் எனப் பொது மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க