வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (09/11/2018)

கடைசி தொடர்பு:18:40 (09/11/2018)

`பன்றிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்த 20 லட்சம் கேப்சூல் மாத்திரைகள் தயார்!’ - அமைச்சர் விஜயபாஸ்கர்’

பன்றிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக 20 லட்சம் கேப்சூல் மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை நகராட்சி ராணியார் பள்ளியில் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு விழிப்பு உணர்வு முகாம் நடந்தது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பேசினார். அமைச்சர் மற்றும் மாணவிகள் அனைவரும் காய்ச்சல் தடுப்பு விழிப்பு உணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். 

நிகழ்ச்சிக்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ``தமிழகத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்த, 42 சுகாதார மாவட்டங்களிலும் அதிகாரிகள் மற்றும்  மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பன்றிக்காய்ச்சல் குணப்படுத்தக்கூடிய நோய்தான். எனவே, பன்றிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்த தேவையான 20 லட்சம் கேப்சூல் மாத்திரைகள் தயார்நிலையில் உள்ளன. மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2400-க்கும் மேற்பட்ட மருத்துவ செவிலியர்கள் மற்றும் 700 லேப் டெக்னீசியன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, டெங்கு, பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தத் தேவைப்பட்டால் கூடுதல் செவிலியர்களை நியமித்துக்கொள்ளலாம். இதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. அந்தந்த மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள் கூடுதல் செவிலியர்களை நியமித்து நோய் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.