சேர்ந்து வாழ மறுத்ததால் வெறிச்செயல்!- கணவன், 2வது மனைவியைக் கொன்ற முதல் மனைவி | First Wife arrested for killing husband and his second wife

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (09/11/2018)

கடைசி தொடர்பு:19:00 (09/11/2018)

சேர்ந்து வாழ மறுத்ததால் வெறிச்செயல்!- கணவன், 2வது மனைவியைக் கொன்ற முதல் மனைவி

தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்த கணவன் மற்றும் அவரின் இரண்டாவது மனைவியை, கூலிப்படை ஏவி முதல் மனைவி கொலை செய்துள்ள சம்பவம் திருப்பத்தூரில் நடந்துள்ளது.

கொலை செய்யப்பட்டவர்கள்

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த அங்கநாதவலசை ஈச்சனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (40). இவரின் முதல் மனைவி கலா (37). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். அதே ஊரைச் சேர்ந்த ஏகாம்பரம் என்பவருடன் கலாவுக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் நெருங்கிப் பழகினர். கடந்த ஓராண்டுக்கு முன்பு கணவன், குழந்தைகளைத் தவிக்கவிட்டு ஏகாம்பரத்துடன் கலா சென்றுவிட்டார்.
அதன்பின், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுஜாதா (30) என்ற பெண்ணை சண்முகம் இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார்.

இதையறிந்த, முதல் மனைவி கலா சமீபத்தில் கணவன் வீட்டுக்கு வந்தார். ‘நான் உங்களோடுதான் சேர்ந்து வாழ்வேன். ஏகாம்பரத்தை பிரிந்துவிட்டேன்’ என்றார். சண்முகம் சேர்ந்து வாழ மறுத்துள்ளார். இதுதொடர்பாக, அவர்களுக்குள் பிரச்னை வந்துள்ளது. 
இதையடுத்து, தனக்கு இடையூறாக இருக்கும் இரண்டாவது மனைவியுடன் சேர்த்து கணவனைக் கொலை செய்ய கலா திட்டமிட்டார். உதவிக்கேட்டு ஏகாம்பரத்தை அணுகினார். அவர் மூலம் கூலிப்படை அறிமுகமானது. நேற்று நள்ளிரவு கூலிப்படையைச் சேர்ந்த 2 பேர் மற்றும் ஏகாம்பரத்தை அழைத்துக்கொண்டு கணவன் வீட்டுக்குச் சென்றார் கலா. கதவைத் தட்டியபோது சண்முகம் திறந்துள்ளார். 
அப்போது, கையில் வைத்திருந்த இரும்புக் கம்பியைக் கொண்டு அவரைப் பயங்கரமாக தாக்கினர். சத்தம் கேட்டு அலறி எழுந்த இரண்டாவது மனைவி சுஜாதாவையும் அந்தக் கும்பல் கொடூரமாகத் தாக்கியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதுபற்றி இன்று காலை தகவலறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். கணவன், மனைவியின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சண்முகத்தின் முதல் மனைவி மற்றும் கூலிப்படைக் கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.