திருக்குறள் வாசித்து மணப்பெண்ணுக்குத் தாலிகட்டிய மணமகன்! - தமிழ் முறைப்படி நடந்த அரசு ஊழியர் திருமணம் | Ariyalur government employee ties knot by taking Thirukkuṛaḷ oath

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (09/11/2018)

கடைசி தொடர்பு:11:25 (12/11/2018)

திருக்குறள் வாசித்து மணப்பெண்ணுக்குத் தாலிகட்டிய மணமகன்! - தமிழ் முறைப்படி நடந்த அரசு ஊழியர் திருமணம்

திருவள்ளுவர் சிலை முன்னிலையிலை இத்திருமணத்தில் தமிழ் உணர்வாளர்கள் முன்னிலையில் மணமக்கள் அவர்களின் சந்ததியினருக்கும் இதே முறையில் திருமணத்தை நடத்துவோம் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்ட சம்பவம் மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம்

அரியலூர் மாவட்டம் தா.பழூரை சேர்ந்தவர் சக்திவேல், இவர் சென்னை ஐ.சி.எஃப்-பில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சத்தியா என்பவருக்கும் இன்று தா.பழூரில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழர் முறைப்படி திருமணம் நடைபெற்றது. தமிழர் முறைப்படி திருமணம் நடத்த முடிவு செய்த சக்திவேல் மணமகள் வீட்டில் தெரிவித்தபோது மறுப்பு தெரிவித்த பெண் வீட்டார், தமிழர் திருமணத்தின் முக்கியத்துவம் பற்றி தெரிவித்த பிறகு ஒப்புக்கொண்டுள்ளனர். அதன்படி வழக்கமான திருமண ஏற்பாடுகள் ஏதும் இல்லாமல், திருவள்ளுவர் உருவச் சிலையை வைத்து, புலவர் ஐயா மோகனால் திருக்குறள் வாசிக்கப்பட்டு, இருவரும் உறுதி மொழி கூறி திருமணம் செய்துகொண்டனர். இதில் கலந்துகொண்டவர்கள் தமிழர் முறைப்படி திருமணம் செய்துகொண்டவர்கள் மணமக்களைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து மாப்பிள்ளை சக்திவேல் கூறுகையில், ``இந்தக் காலகட்டத்தில் தமிழர்களின் அடையாளத்தை மறந்து அண்ணிய காலசாரத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள். கலாசாரத்தை மீட்க வேண்டும் என்றால் முதலில் நான் மாற வேண்டும். அதன் பிறகு மற்றவர்களை மாற்ற வேண்டும். அதன் நோக்கில்தான் நல் உள்ளம் கொண்ட சமூக ஆர்வலர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டேன். திருமணத்துக்கு வந்திருந்த பலரும் என்னிடம், `எங்கள் மகன், மகளுக்கும் இதைப்போல சீர்திருத்த முறையில் திருமணம் நடத்த வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதேபோல் இனி நடைபெறுகிற அனைத்து திருமண நிகழ்ச்சிகளையும் தமிழர்களுடைய பண்பாட்டோடும் அடையாளத்தோடும் திருமணங்களை நடத்துவோம்’’ என்றார்.