வெளியிடப்பட்ட நேரம்: 18:32 (09/11/2018)

கடைசி தொடர்பு:20:03 (09/11/2018)

`சர்ச்பார்க் பள்ளியில் இடம் கிடைக்காதது ஏன்?’ - ஃப்ளாஷ்பேக் பகிர்ந்த ஸ்டாலின்

``தன் பெயர் காரணமாகச் சென்னையின் புகழ்பெற்ற சர்ச்பார்க் கான்வென்டில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை'' என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஸ்டாலின்

1953-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தார். ஸ்டாலின் பிறந்த 5 நாள்கள் அதாவது மார்ச் 5-ம் தேதி சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோசப் ஸ்டாலின் மறைந்தார். இதையடுத்து தந்தை கருணாநிதி, மகனுக்கு ஸ்டாலின் என்ற பெயரை சூட்டினார். தன் மகனுக்குத் தமிழ் பெயர் சூட்டவில்லை என்பதற்காகப் பலரும் அப்போது கருணாநிதியை விமர்சித்தது உண்டு. 

இந்த நிலையில், தி.மு.க.வைச் சேர்ந்த துறையூர் எம்.எல்.ஏ ஸ்டாலின் குமார் திருமணத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், தன் பெயர் காரணமாக சர்ச்பார்க் கான்வென்டில் படிக்கும் வாய்ப்பை இழந்ததாகத் தெரிவித்துள்ளார்.

விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின் , ``என் மாமா முரசொலி மாறன் என்னையும் அக்கா செல்வியையும் சர்ச்பார்க் கான்வென்டில் படிக்க வைக்க நினைத்தார். அப்போது, ரஷ்யாவில் ஸ்டாலின் மறைவை வைத்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. எனவே பள்ளி பிரின்சிபால், ' மாமாவிடம் இந்தப் பெயரை மாற்றிக் கொண்டு வாருங்கள்' என்று சொன்னார். என் தந்தையிடம் மாமா இதைச் சொன்னபோது அவரோ. ``அப்படியென்றால் பள்ளியை மாற்றுவோம். பெயரை மாற்ற வேண்டாம்'' என்று கூறினார். என் பெயர் காரணமாக அக்கா செல்வியும் சர்ச்பார்க் கான்வென்டில் படிக்க முடியாமல் போய்விட்டது. எனக்கு தமிழ்பெயரைச் சூட்டாததால் பலரும் என் தந்தைக்கு கண்டனம் தெரிவித்தனர். முதலில் ஐயாதுரை என்ற பெயரே சூட்டப்பட்டது. ரஷ்ய தலைவர் மறைவையடுத்து அவர் மீது கொண்ட பற்று காரணமாக, தந்தை பெயரை மாற்றி வைத்தார்'' என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க