வெளியிடப்பட்ட நேரம்: 19:11 (09/11/2018)

கடைசி தொடர்பு:19:11 (09/11/2018)

``சினிமாதான் வைரலாகும்; ராஜலட்சுமி பத்தி பேச யாருமில்ல!’’ ஆசிரியை சபரிமாலா

"மரணதண்டனை பத்தி பலருக்கும் மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனா, அப்படி கடுமையான தண்டனை கொடுத்தால்தான் மத்தவங்களுக்குப் பயம் வரும். இந்தக் கொடுமை கொஞ்சமாவது குறையும்!"

``சர்கார் பற்றித்தான் எல்லோர்கிட்டேயும் கேள்விக் கேட்கிறாங்க’’ என்ற சற்று சலிப்புடனே பேசத் தொடங்குகிறார் ஆசிரியை சபரிமாலா. நீட் தேர்வை தமிழகத்தின் மீது மத்திய அரசு திணித்ததை எதிர்த்து, தன் அரசு வேலையைத் தூக்கியெறிந்தவர் சபரிமாலா. கல்வி தொடர்பான போராட்டங்களில் மட்டுமல்லாது, சமூக நீதி, பெண்கள் மீதான வன்முறை உள்ளிட்ட பல்வேறு களங்களில் உரக்கக் குரல் கொடுத்துவருபவர். அங்கெல்லாம் முன்னின்று களம்காண்பவர். நேற்று, சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தவரிடம், அது குறித்துக் கேட்டேன். 

சபரிமாலா

``நாம ரொம்பவும் மோசமான காலத்துல வாழறோம். தேனியில ஏழாவது படிச்சிட்டு இருந்த ராகவிங்கிற மாணவியைப் பாலியல் சித்ரவதைப் பண்ணிக் கொன்னுருக்காங்க. அவ கால்ல காம்பஸால் கீறி ரத்தம் வழிஞ்சு கிடந்த போட்டோவை எல்லோரும்தானே பார்த்தோம். அந்தக் கொடுமையைப் பத்திப் பேசி முடிக்கிறதுக்குள்ள சேலத்து ராஜலட்சுமி கொல்லப்பட்டிருக்கா. எட்டாவது படித்த ராஜலட்சுமி என்ற பள்ளி மாணவியைப் பாலியல் துன்புறுத்தி, தலைய தனியா துண்டிச்சிருக்கான் ஒருவன். இப்படி வரிசையா பள்ளிக்கூடத்துல படிக்கிற மாணவிகளா வரிசையா கொல்லப்பட்டு வாராங்க. ஆசிரியரா இருந்த எனக்கு இது பெரும் மன உளச்சல தருது. இப்படித்தானே அனிதாவை இழந்தோம். இன்னும் எத்தனை பேர இழக்குறது. அடிக்கிறாங்க, உதைக்கிறாங்கனா... அதுக்கு எதிராகப் போராடி, அந்தப் புள்ளைகளுங்க தைரியம் கொடுத்து, படிக்க வெச்சு, வேலை வாங்கிக்கொடுத்து வாழ வைக்கலாம். உயிரையே எடுக்கிறாங்கன்னா... இந்த அநியாயத்தை எங்கே போய் சொல்ல? 

இந்த விஷயத்தை அரசோட கவனத்துக்குக் கொண்டுபோகணும்னுதான் வள்ளுவர் கோட்டம் பக்கத்தில் உண்ணாவிரதம் இருந்தேன். தலைநகரில் சத்தம் போட்டு, கத்தினாவது அரசின் காதில் விழுமான்னு பார்க்கிறேன். ஆனா அரசு, ராஜலட்சுமி கொல்லப்பட்டதுக்கு மெளனம் காக்குது. சமூக செயல்பாட்டாளர்கள் ராஜலட்சுமி வீட்டுக்குப் போறாங்க. முதல்வர், துணை முதல்வர்னு ரெண்டு பேரும் இருந்தும் ஓர் அறிக்கை விடல. ராஜலட்சுமிக்காக அழுதுட்டு இருக்கும்போது, ஆள்றவங்க 18 எம்.எல்.ஏ வழக்குல வெற்றிபெற்றதுக்காக ஸ்வீட் கொடுத்து கொண்டாடிட்டு இருக்காங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் ராஜலட்சுமி கொலை வழக்கை, 20 நாள்களுக்குள்ள அவசர வழக்காக எடுத்து விசாரிக்கணும். இல்லைன்னா, தொடர் உண்ணாவிரதம் இருக்க வேண்டியதுதான். நம்மள இழந்தாவது நீதியைப் பெற வேண்டிய மோசமான காலத்தில் வாழறோம். ராஜலட்சுமி மாதிரி பாலியல் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்குகளை 20 நாளுக்குள் விசாரிச்சு, நிரூபிக்கப்பட்ட அடுத்த நாளே மரணதண்டனைக் கொடுக்கணும். மரணதண்டனை பத்தி பலருக்கும் மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனா, அப்படி கடுமையான தண்டனை கொடுத்தால்தான் மத்தவங்களுக்குப் பயம் வரும். இந்தக் கொடுமை கொஞ்சமாவது குறையும்" என்று ஆதங்கத்துடன் பேசியவர், சற்று நேரம் அமைதியாகி, பின் தொடர்கிறார். 

சபரிமாலா

``அரசு மட்டுமல்ல, பொதுமக்கள் மீது வருத்தமிருக்கு. பெண் குழந்தையைப் பெற்ற ஒவ்வொரு பெற்றோருக்கும் ராஜலட்சுமியின் கொலை, வலியைக் கொடுத்திருக்கணும் இல்லையா? அவங்க திரண்டு வந்திருக்கணும்தானே! ஏன் வரல? தனக்குனு ஒரு விஷயம் நடந்ததாத்தான் வருவாங்களா? இந்த நிலை மாறணும். மீடியாவிலும் இந்தச் செய்தி அதிகம் வரல. சினிமாதான் வைரலாகுது; ராஜலட்சுமியைப் பத்திப் பேச்சே வராது. என்கிட்டகூட, சர்கார் பத்திதான் கேள்வி கேட்கிறாங்க. நான் உண்ணாவிரதம் இருக்கும்போது வந்த நல்லகண்ணு ஐயா, திருமுருகன் உள்ளிட்டோரிடமும்கூட சர்கார் பத்தி சொல்லுங்கனுதான் கேட்கிறாங்க. சினிமாங்கிறது வியாபாரம். இது ஒரு மாணவியின் உயிர்போன விஷயம். எங்க பார்த்தாலும் சினிமாதான். 

ராஜலட்சுமி கொலைக்கு எதிரா குரல் கொடுக்கிறவங்க ஒண்ணு சேர்ந்து நிக்கணும். அப்பதான் அது இன்னும் வலுவா கேட்கும். நியாயம் கிடைக்க உதவியா இருக்கும்" என்கிறார் சபரிமாலா.


டிரெண்டிங் @ விகடன்