``ஒரு நல்ல படத்தைப் பார்த்த திருப்தி இருக்கிறது’’ - கடம்பூர் ராஜுவின் பில்லா பாண்டி ரிவ்யூ | Minister Kadambur Raju praises Billa Pandi movie

வெளியிடப்பட்ட நேரம்: 18:58 (09/11/2018)

கடைசி தொடர்பு:18:58 (09/11/2018)

``ஒரு நல்ல படத்தைப் பார்த்த திருப்தி இருக்கிறது’’ - கடம்பூர் ராஜுவின் பில்லா பாண்டி ரிவ்யூ

அமைச்சர் கடம்பூர் ராஜு

`சர்கார்’ படம் வெளிவந்து அந்தப் படத்தின் உள்ளடக்கம் பேசுபொருளானதும் அரசியல் தரப்பிலிருந்து அதற்கு எழுந்த முதல் விமர்சனக் குரல் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுடையது. படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டுமெனச் சொன்னார். பிறகு, மற்ற அ.தி.மு.க அமைச்சர்கள் எதிர்த்தார்கள். அ.தி.மு.க தொண்டர்கள் தமிழகத்தில் பல மாவட்டங்களில் சர்கார் ஓடும் திரையரங்குகளின் முன் நின்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள். பேனர்களைக் கிழித்தார்கள். காவலர்கள் முருகதாஸ் வீட்டுக்குச் சென்றார்கள் என நேற்றிலிருந்து பரபரப்பாக இருக்கும் சூழலில், இதை ஆரம்பித்து வைத்த அமைச்சர் கடம்பூர் ராஜு பில்லா பாண்டி படத்தைப் பார்த்து தன்னுடைய கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

திரைப்பட ஆர்வலர்களே பெரிதும் ஆர்வம் காட்டாத ஒரு படத்துக்கு அமைச்சர் ஒருவர் பட ரிவ்யூ கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. பில்லா பாண்டி படத்தைப் பார்த்து கடம்பூர் ராஜு கூறியதாவது, ``பில்லா பாண்டி படத்தைப் பார்த்தேன். யதார்த்தமான நடிப்பால் அனைவரும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். சிறந்த கதையம்சம் உள்ள படமாக நீண்ட நாள்களுக்குப் பிறகு நிறைந்த ஒரு நல்ல படத்தைப் பார்த்த திருப்தி இருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.