வெளியிடப்பட்ட நேரம்: 19:59 (09/11/2018)

கடைசி தொடர்பு:12:49 (10/11/2018)

`விக்டிம் ஆக்கப்படுகிறாரா விஜய்?’ தொடரும் அரசியல் அழுத்தம்

`விக்டிம் ஆக்கப்படுகிறாரா விஜய்?’ தொடரும் அரசியல் அழுத்தம்

டிகர் விஜய்யின் `சர்கார்’ படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய சில காட்சிகளை மறுதணிக்கை செய்து படக்குழு நீக்கிவிட்டது. ``சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதால் பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது” என்று அறிவித்திருக்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜு. 

ஆனால், `சர்கார்' தொடர்பாக ஆளும் கட்சியான அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் எழுப்பிய சர்ச்சைகளும் படத்துக்கு எதிராக நடத்திய போராட்டங்களும் போஸ்டர்கள், பேனர் கிழிப்பு போன்ற ஆவேச நடவடிக்கைகளும், `சர்கார்’ படத்துக்கு மட்டும் எதிரானதா அல்லது விஜய் என்ற தனிமனித நடிகருக்கு எதிரானதா என்ற கேள்வியை எழுப்பியிருப்பதை மறுக்க முடியாது.

ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்றும், தனிக்கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும் அவர் அறிவித்து ஓராண்டு நிறைவடையப்போகிறது. மற்றோர் உச்சபட்ச நடிகரான கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியை ஏற்கெனவே ஆரம்பித்து, தன் கட்சிக் கூட்டங்களையும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளையும் நடத்திக்கொண்டிருக்கிறார். 

நடிகர் சங்க பொதுச் செயலாளரான விஷால், ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலின்போது வேட்புமனுத்தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவர், தன் ரசிகர் மன்றங்களை 'மக்கள் நல இயக்கம்’ என்று பெயர் மாற்றம் செய்து அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்தும் வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். இதுபோன்றவர்களுக்கு எதிராக ஒருசில கருத்துகள், கண்டனங்களோடு நிறுத்திக்கொண்ட அ.தி.மு.க-வினர், விஜய்க்கு எதிராக மட்டும் இந்தளவுக்குப் போராட்டங்களில் இறங்கியது ஏன் என்று கேள்வி எழுப்புகிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.

ரஜினியின் அரசியல் அறிவிப்புக்குப் பின்னர்தான், அவரின் ‘காலா’ படம் வெளிவந்தது. கமல் கட்சி ஆரம்பித்த பிறகே 'விஸ்வரூபம்-2' வெளியானது. விஷாலின் 'சண்டக்கோழி-2' அண்மையில் வெளியானது. இந்தப் படங்களுக்கு எல்லாம் பெரிய அளவில் எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் எழாத நிலையில், நடிகர் விஜய்யின் 'சர்கார்'-க்கு மட்டும் அதிகளவில் எழுந்திருப்பதை அவ்வளவு எளிதாகக் கடந்துவிட முடியாது.

விஜய் - சர்கார்

``விஜய்க்கு எதிராக அ.தி.மு.க சாட்டையைச் சுழற்றுவதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் அதிகம் இருக்கின்றன” என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ``கமல் அரசியலில் இறங்கியிருப்பதாலோ, ரஜினி அரசியல் கட்சியைத் தொடங்கப்போவதாலோ, அ.தி.மு.க-வின் வாக்கு வங்கி பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்பது, ஆளும் தரப்பினரின் நம்பிக்கை. ஆனால், விஜய் அரசியலில் இறங்கினால், அ.தி.மு.க-வுக்கு தற்போது இருக்கும் வாக்குவங்கியில் குறிப்பிடத்தக்க அளவு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கருதுகிறார்கள். 

ஏனென்றால், அ.தி.மு.க-வின் வாக்குவங்கிக்கு அடிப்படை ஆதாரமாகத் திகழ்ந்து வரும், அந்தக் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் பிம்பத்தை, தன்னுடைய படங்களில் விஜய் அதிகம் பயன்படுத்துகிறார் என்று அ.தி.மு.க-வினர் நினைக்கிறார்கள். எம்.ஜி.ஆருக்கு இருந்த ‘எங்கவீட்டுப் பிள்ளை’ எனும் இமேஜை தனதாக்கிக் கொள்ளும் முயற்சியும் ஆர்வமும் விஜய்க்கு அதிகளவில் இருக்கிறது. அ.தி.மு.க-வின் வாக்குவங்கியில் மிகப்பெரிய பங்குவகிக்கும் பெண்களின் வாக்குகளைக் குறிவைத்தும் விஜய் இப்போதே காய் நகர்த்துவதாக அ.தி.மு.க-வினர் அச்சம் கொள்கிறார்கள். ஏற்கெனவே 2011 சட்டமன்றத் தேர்தலின்போது, அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் குரல் கொடுத்தார். இதனால், விஜய் மீது அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டர்கள் பலருக்கு நல்ல அபிமானம் உள்ளது.

சமீபகாலமாக விஜய்யின் படங்களில், அரசியல் வசனங்கள் அதிகம் இடம்பெறுவதுடன், அவரின் ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களிடையேயும் விஜய் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதை ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்திவருவதாகக் கூறிக் கொள்ளும் ஆளும்தரப்பு ரசிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. அந்த வகையில், சர்கார் சர்ச்சையின் பின்னணியில் அ.தி.மு.க. இருக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது. அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகள் மாறி, மாறி தமிழகத்தில் ஆட்சியில் இருந்துள்ள நிலையில், அந்தக் கட்சிகளுக்கு அமைப்புரீதியான பலம் இருப்பதே முக்கியக் காரணம். வார்டுகள், ஒன்றியம் வாரியாக மக்களைத் திரட்டுவதற்கும், பூத் ஏஜெண்டுகளை நியமித்து தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கும், அதுவே கைகொடுக்கின்றன. அந்த வகையில் அமைப்பு ரீதியாக மற்ற நடிகர்களைவிடவும் விஜய் ரசிகர் மன்றங்கள், முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறது. 

ஏனென்றால், ரஜினி ரசிகர் மன்றங்கள், கடந்த ஆண்டு அவரின் அரசியல் அறிவிப்புக்குப் பின்னர் ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்ற பெயர் மாறி அதற்கு உறுப்பினர்களைத் திரட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். கமல்ஹாசனைப் பொறுத்தமட்டில் வெகுஜன ரசிகர்களை திருப்திப்படுத்தும் படங்களைக் குறைவாகவே செய்திருப்பதால், தமிழகத்தின் பல பகுதிகளில் அவருக்கு அதிகளவில் ரசிகர் மன்றங்கள் இல்லை. ஆனால் விஜய், இப்போதுவரை ரசிகர் மன்றங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார். அதுவும் 'மக்கள் இயக்கம்' என மாற்றி, நலத்திட்ட உதவிகள், பிறந்தநாள் கூட்டங்கள் என்று 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். 

எல்லாக் கட்சிகளும் விஜய்யை ரவுண்டுகட்ட இதுவே முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. `காவலன்' படத்துக்கு அப்போதைய ஆளுங்கட்சியான தி.மு.க எதிர்ப்பு தெரிவித்ததும், 'தலைவா' படத்தைத் தொடர்ந்து, இப்போது 'சர்கார்' படத்துக்கு அ.தி.மு.க கடும் எதிர்ப்பு தெரிவித்ததும், அரசியல் காரணங்களுக்காகவே என்பது உறுதியாகிறது. விஜய்க்கு எதிரான இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு அரசியல் கட்சிகளின் அதீத அச்சமே காரணங்களாக உள்ளன. அண்மைக்கால நடவடிக்கைகள் அதையே வெளிக்காட்டுகின்றன” என்று தெரிவிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 

`சர்கார்’ சர்ச்சை விஜய் ரசிகர்களையும் சூடாக்கி இருக்கிறது. ``விஜய் ஆளுங்கட்சியினரால் ‘விக்டிம்’ ஆக்கப்படுகிறார்” எனக் கொந்தளிக்கிறார்கள் அவர்கள். ``காவலன், தலைவா தொடங்கி இப்போது சர்கார் திரைப்படம்வரை ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள், விஜய்க்கு இடையூறு தருவதை, தி.மு.க-வில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் எம்.ஜி.ஆரின் படங்களுக்கு எதிராக, அப்போது தி.மு.க. குடைச்சல் கொடுத்ததைப் போன்று நாங்கள் பார்க்கிறோம். விஜய்க்கு எதிரான நடவடிக்கைகளில் நிச்சயம் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது” என்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு விஜய் என்ன பதில் சொல்லப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


டிரெண்டிங் @ விகடன்