வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (09/11/2018)

கடைசி தொடர்பு:22:00 (09/11/2018)

`ஒருபிடி மண் கூட எடுத்துச் செல்ல விட மாட்டோம்!’ - அரசு அதிகாரி காலில் விழுந்து கெஞ்சிய விவசாயி

திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்காக ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் விவசாயி ஒருவர்  எங்க ஊரில் மணல் குவாரி அமைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தார். மேலும், அதற்காக அதிகாரிகள் காலில் விழுந்து கதறிய விவசாயியை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் சென்றது அப்பகுதி மக்களை வேதனையடையச் செய்துள்ளது.`அந்த இடத்தில் இருந்து ஒரு பிடி மண் கூட எடுத்துச் செல்ல விடமாட்டோம்' என்று மக்கள் ஆவேசமாகக் கூறினர்.

திருவையாறு அருகே உள்ளது விளாங்குடி கிராமம் இங்கு 200 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு விவசாயம்தான் பிரதான தொழில். இந்த ஊரில் அரசு மணல் குவாரி அமைக்க சில மாதங்களுக்கு முன் தமிழ அரசு முடிவு செய்து அறிவித்தது. இதற்கு அப்போதே அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பலகட்ட போராட்டங்களையும் நடத்தி வந்தனர். அதோடு மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து மணல் குவாரி அமைப்பதற்குத் தடை வாங்கினர்.

இந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மணல் குவாரி அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்வதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி அருண் தம்புராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். இந்தத் தகவல் கிடைத்ததும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொள்ளிடம் ஆற்றுக்கு விரைந்தனர். அவர்களிடம் ஆய்வுக்கு வந்த அதிகாரிகள், `மணல் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் அரசு கட்டடங்களே பணி நடைபெறாமல் பாதியில் நிற்கிறது. மணல் தட்டுப்பாட்டைப் போக்க அரசே இங்கு நேரடியாக மணல் குவாரி அமைக்கத்தான் போகிறது. நீதிமன்றம் சில விஷயங்களைக் கூறி எங்களை ஆய்வு செய்ய அனுப்பியுள்ளது. நாங்கள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வோம். அதன்பிறகு முடிவு என்ன என தெரிய வரும்’ என்று கூறியிருக்கின்றனர்.

இதை கேட்ட 61 வயதான பாலசுப்ரமணியன் என்ற விவசாயி வந்திருந்த அதிகாரிகளுக்கு வயது குறைவு என்று கூட நினைக்காமல் ஊரின் நலனுக்காக எங்க ஊரில் மணல் குவாரி அமைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து அழுதுகொண்டே அதிகாரிகள் காலில் விழுந்து கெஞ்சத் தொடங்கினார். `அந்த விவசாயி காலில் விழுந்ததை தடுக்க முயலாமலும் விழுந்தவரை தூக்கி விடாமலும் அதிகாரிகள் அலட்சியம் செய்தபடி அந்த இடத்தில் இருந்து கிளம்பிச் சென்றனர்’ என வேதனையுடன் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பாலசுப்ரமணியனிடம் பேசினோம், ``எங்க பகுதி கொள்ளிடம் ஆற்றில் இருந்துதான் எட்டு மாவட்டத்துக்கு கூட்டுக் குடி நீர் திட்டத்தில் குடி நீர் செல்கிறது. மேலும், தஞ்சாவூர் மாநகராட்சிப் பகுதிகளுக்கும் குடி நீர் செல்கிறது. ஏற்கெனவே 15 அடியில் இருந்த நிலத்தடி நீர் 60 அடி ஆழத்துக்குச் சென்றுவிட்டது. மணல் குவாரி அமைத்தால் நிலைமை இன்னும் மோசமாக மாறிவிடும். இதனால், குடிநீருக்கும் விவசாயத்துக்கும் தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும். இந்தப் பிரச்னைகளால்தான் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்துப் போராடி வருகிறோம். காலில் விழுந்தும் கெஞ்சுகிறோம். ஆனால், அரசு மணல் குவாரி அமைத்தே தீரும் என்கிற நோக்கத்தில் செயல்படுகிறது, இதனால் நாங்கள் எங்களுடைய ஆதார், ரேஷன் கார்டு, நிலப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களையும் கூட அரசிடம் ஒப்படைத்துப் போராடத் தயாராக இருக்கிறோம். எங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பதற்காக ஒரு போதும் மணல் குவாரி அமைக்க விடாமல் தடுப்பதோடு, ஒரு பிடி மண் கூட இங்கிருந்து எடுத்துச் செல்லவும் விடமாட்டோம்’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க