வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (09/11/2018)

கடைசி தொடர்பு:22:30 (09/11/2018)

`ஹரிணி அம்மா வைத்தியச் செலவுக்கு வச்சுக்குங்க!' - கருணையோடு நிதியுதவி வழங்கிய கனடா பெண்

காணாமல் போன ஹரிணி ஒன்றரை மாதங்கள் கடந்தும் கிடைக்காமல் போக, தீபாவளியன்று நாள் முழுவதும் சாப்பிடாமல் ஹரிணியின் தாய் காளியம்மாள் அல்லாடிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்த விகடன் இணையதள செய்தியைப் பார்த்து காளியம்மாள் மூன்று மாதக் குழந்தையை வயிற்றில் சுமப்பவர் என்பதால், அவரை மருத்துவமனையில் சேர்த்து மருத்துவப் பரிசோதனை செய்ய வசதியாக ரூ.10,000 பணத்தை அனுப்பி நெகிழ வைத்திருக்கிறார் கனடாவைச் சேர்ந்த நிர்மலா என்ற பெண்.

ஹரிணி

காஞ்சிபுரம் மாவட்டம், மானாமதி கிராமத்தைச் சேர்ந்த நாடோடி இன தம்பதியான வெங்கடேசன், காளியம்மாளின் இரண்டு வயது மகள்தான் ஹரிணி. ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பாசி மணிகள் விற்கப் போன அவர்கள் அணைக்கட்டு காவல்நிலையம் அருகே இரவில் படுத்து உறங்கினர். நடுராத்திரியில ஹரிணி காணாமல் போக, பதறிப்போன அந்தத் தம்பதி, அணைக்கட்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். 'ஹரிணி கிடைக்கிற வரை இந்த இடத்தை விட்டு போகமாட்டோம்' என்று அங்கேயே தங்கி இருக்கிறார்கள். காளியம்மாள் கர்ப்பிணியாக உள்ளதால், அவர் உணவு சாப்பிடாமல் அல்லாடி வருவது வயிற்றில் உள்ள குழந்தையையும் பாதிக்கும் என்று வெங்கடேசன் பதறி வருகிறார். இந்த நிலையில், கரூரைச் சேர்ந்த 'இணைந்த கைகள்' என்ற சமூக அமைப்பு, 'ஹரிணியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு' என்று அறிவித்தனர். 

அதை சமூக வலைதளங்களில் பரப்புவதோடு, மாவட்டவாரியாக அதை நோட்டீஸாக அச்சடித்து விநியோகித்து வருகிறார்கள். இந்த தகவல்கள் அனைத்தையும் விகடன் இணையதளம் தொடர்ந்து செய்தியாக பதிந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை நான்கு தனிப்படைகள் அமைத்து ஹரிணியைத் தேடி வருகிறார்கள். இதற்கிடையில், ரஜினி ரசிகர்களும் சமூக வலைதளங்கள் மூலம் ஹரிணியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். கோவையில் ராஜம் என்ற பெயரில் மூன்று பேருந்துகளை இயக்கும் அருண் என்பவர், `ஹரிணியைக் கண்டுபிடித்து தருபவர்கள் எங்கள் பேருந்துகளில் 5 வருடங்கள் இலவசமாக பயணிக்கலாம்’ என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

சலீம்இந்த நிலையில், ஹரிணி காணாமல்போன இந்த ஒன்றரை மாதங்களில் சரியாகச் சாப்பிடாமல் பரிதவித்து வருகிறார் காளியம்மாள். அவர் மூன்று மாத கர்ப்பிணி என்பதால், 'சாப்பிடாமல் இருப்பது ஆபத்தாச்சே' என்று அவரது கணவர் பதறி வருகிறார். தீபாவளி அன்று, நாள் முழுக்க சாப்பிடாமல் அடம் பிடித்திருக்கிறார். இதனால் அவரது உடல்நிலை மோசமாக அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்க வைக்கும் முயற்சியில் இணைந்த கைகள் அமைப்பு இறங்கி இருக்கிறது. இதுகுறித்து பற்றி கடந்த 8-ம் தேதி விகடன் இணையதளத்தில்,'உதவ ஆள் இல்லை!' - ஹரிணியை நினைத்து சாப்பிடாமல் இருக்கும் கர்ப்பிணி தாய்!' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த செய்தியை படித்து கண்கலங்கிய கனடாவைச் சேர்ந்த நிர்மலா என்ற விகடன் இணையதள வாசகி, 'காளியம்மாளை மருத்துவமனையில் சேர்த்து உடனே வைத்தியம் பாருங்க' என்று உருக்கமாகச் சொன்னதோடு, தனது சார்பாக பத்தாயிரத்தை அனுப்பி நெகிழ வைத்திருக்கிறார்.

நம்மிடம் பேசிய அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சலீம், ``ஹரிணி கிடைக்கலையேங்கிற விரக்தியில காளியம்மாள் சாப்பிடாமல் உடம்பை வருத்தி வருகிறார். காவல்துறையும் முன்புபோல் வேகமாகச் செயல்படவில்லை. ஹரிணியைக் கண்டுபிடிக்க சமூக அமைப்புகள் மட்டுமே முயற்சிகள் செய்துட்டு இருக்கோம். இந்த நிலையில்தான், விகடன் இணையதளத்தில் செய்தியை படிச்சுட்டு, கண்கலங்கி போய் எங்ககிட்ட பேசினாங்க கனடாவைச் சேர்ந்த நிர்மலாங்கிற வாசகி. 'ஹரிணி பாப்பாவை நினைத்து காளியம்மாள் சாப்பிடாமல் இருப்பது அவங்க வயித்துல வளர்ற இன்னொரு பாப்பாவையும் பாதிக்கும். அதனால், அவங்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிங்க. தெம்பு தைரியம் கொடுத்து நல்லா சாப்பிட வைங்க'ன்னு உருக்கமாக பேசியதோடு, பத்தாயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி நெகிழ வைத்தார். போலீஸ் கைவிட்டா என்ன சார்? உலகம் முழுக்க ஹரிணி பாப்பாவைக் கண்டுபிடிக்க பலரும் முயற்சி பண்ணிகிட்டு இருக்காங்க. ஹரிணியைக் கண்டுபிடித்தே தீருவோம்’’ என்றார் உறுதியாக.