வெளியிடப்பட்ட நேரம்: 00:17 (10/11/2018)

கடைசி தொடர்பு:00:17 (10/11/2018)

தோல்வியில் முடிந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை! போராட்டத்தை தீவிரப்படுத்தும் யமஹா ஊழியர்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள யமஹா தொழிற்சாலையில் தொழிற்சங்கம் தொடங்கப்பட்டதால் இரண்டு பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டிக் கடந்த 50 நாள்களுக்கும் மேலாக 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

யமஹா தொழிற்சங்க பேச்சுவார்த்தை

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா முன்னிலையில் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் தொழிற்சங்க நிர்வாகிகள், யமஹா நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பேச்சு வார்த்தையின் போது சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. இதனால் வேலைநிறுத்தம் தொடர்பான எவ்வித முக்கிய முடிவும் எடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் “பிரச்னையை 14ம் தேதிக்குள் முடிவுக்குக் கொண்டு வந்துவிடுவோம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எங்களைப் பொறுத்தவரை பணிநீக்கம் செய்யப்பட்ட இரண்டு ஊழியர்களையும் மீண்டும் வேலைக்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். யார்மீதும் எந்த பழிவாங்கல் நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது எனத் தெரிவித்திருக்கிறோம். அதுபோல் ராயல் எல்ஃபீல்டு நிறுவனம் சார்பிலும் ஓரிரு தினங்களில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அந்த பேச்சுவார்த்தையிலும் சுமுகமான முடிவு எட்டப்படும் என நினைக்கிறோம். 14ம் தேதிக்குள் எங்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் எங்கள் போராட்டத்தை மிகத் தீவிரமாக வலுப்படுத்துவோம்.” என்கிறார்.

இந்த நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் சென்னை கோட்டையை நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக யமஹா ஊழியர்கள் தெரிவித்துள்ளார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க