வெளியிடப்பட்ட நேரம்: 23:34 (09/11/2018)

கடைசி தொடர்பு:10:33 (10/11/2018)

``காட்டு யானைகளைக் காப்பாற்றுங்கள்" - கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்...!

கோவையில் காட்டு யானைகளைப் பிடிக்கக் கூடாது என்று அந்தப் பகுதி மக்கள் போஸ்டர் அடித்துள்ளனர்.

கோவையில் காட்டு யானைகளைப் பிடிக்கக் கூடாது என்று அந்தப் பகுதி மக்கள் போஸ்டர் அடித்துள்ளனர்.

யானை போஸ்டர்

கோவை தடாகம், மாங்கரை, ஆனைக்கட்டி போன்ற பகுதிகள் வனத்தை ஒட்டியுள்ளன. இந்தப் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் என்பது எப்போதும் இருக்கும். இதனிடையே, கடந்த சில ஆண்டுகளாக அந்தப் பகுதிகளில் மக்கள் குடியேற்றம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, வாழை போன்ற யானைகளை ஈர்க்கும் வகையில் விவசாயம் நடந்து வருகிறது. இதனால், உணவு தேடி அங்கு யானைகள் வரும். இதையடுத்து, யானைகளால் தங்களது வீடுகளும், தோட்டங்களும் பாதிக்கப்படுவதாகக் கூறி, அந்தப் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காட்டு யானைகள் பிரச்னைக்குத் தீர்வு வேண்டுமென்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதிலும் முக்கியமாக, சின்னத்தம்பி மற்றும் விநாயகன் என்றழைக்கப்படும் காட்டு யானைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமென்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதையடுத்து, முதுமலையில் இருந்து விஜய் மற்றும் பொம்மன் என்ற இரண்டு கும்கி யானைகள் கோவைக்கு அழைத்து வரப்பட்டுள்ளன.

இந்த இரண்டு கும்கிகளும், காட்டு யானைகளைத்தான் பிடிக்கத்தான் கோவை வந்திருக்கின்றன என்று தகவல் வெளியாகியது. இதைத்தொடர்ந்து, ``வெளியே வரும் காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் துரத்துவதற்காக கும்கி யானைகளைப் பயன்படுத்த உள்ளோம்" என்று வனத்துறை தரப்பில் விளக்கம் அளித்தனர்.

கும்கி யானைகள்

கும்கிகள் சேரன், ஜான்

மேலும், கோவையில் ஏற்கெனவே இருக்கும் சேரன் மற்றும் ஜான் ஆகிய இரண்டு கும்கி யானைகள், காட்டு யானைகளை விரட்டுவதற்காக, வரப்பாளையம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், விநாயகன் என்றழைக்கப்படும் காட்டு யானையை மேலிடத்தில் இருந்து ஆர்டர் வந்ததும் வேறு இடத்துக்கு மாற்றி விடுவார்கள் என்று தகவல்கள் சொல்லப்படுகின்றன.

இந்நிலையில், அந்த இரண்டு காட்டு யானைகளையும் பிடிக்கக் கூடாது என்று அந்தப் பகுதியைச் சேர்ந்த பழங்குடி மக்களும், சூழலியல் ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கெனவே, #SaveChinnathambi #SaveVinayagan என்ற ஹேஷ்டேக்கில் காட்டு யானைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ஸ்டேட்டஸ்கள் பரவிவந்தன. இதையடுத்து, தற்போது அந்த யானைகளைக் காப்பாற்ற வேண்டுமென்று, கோவையில் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ``வனம் எங்களின் வாழ்விடம், எங்களையும் வாழவிடுங்கள்” என்று சின்னத்தம்பி யானை படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. காட்டு யானைகளைப் பிடிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அந்தப் பகுதியைச் சேர்ந்த பழங்குடி மக்கள் தெரிவித்துள்ளனர்.