வெளியிடப்பட்ட நேரம்: 01:24 (10/11/2018)

கடைசி தொடர்பு:10:45 (10/11/2018)

‘அமைச்சர்களுக்கும் குளிர்விட்டுப்போச்சு!’ - ஜெயக்குமாருக்கு பிரேமலதா பதிலடி

‘ஜெயலலிதா இல்லாததால் நடிகர்கள் மட்டுமல்ல அமைச்சர்களுக்கும் குளிர்விட்டுப்போச்சு’ என பிரேமலதா விஜயகாந்த், அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த்

வேலூர் சத்துவாச்சாரி வள்ளலாரில் இன்று மாலை நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், ``சர்கார் படத்தை நான் பார்க்கவில்லை. ஆனால், சினிமாவைச் சினிமாவாக பார்க்க வேண்டும். ஏதோ ஒரு காட்சிகள் வந்ததற்காக அந்தக் காட்சிகளை நீக்கச் சொல்வது சரியல்ல. ‘சென்சார்’ செய்யப்பட்ட பிறகுதான் படம் அனுமதிக்கப்பட்டிருக்கும். அப்படி இருக்கையில், படத்தைத் தடை செய்ய முடியாது. ‘சென்சார்’ செய்தவர்கள் தவறாக செய்திருப்பார்களா? காட்சிகளை நீக்குமாறு அ.தி.மு.க-வினர் பிரச்னை செய்வது வேதனையாக இருக்கிறது. திரைத்துறையில் இருப்பவர்களும் படங்களை சர்ச்சைக்குள் கொண்டுசென்று, அதன் மூலம் ஓட்ட நினைக்கிறார்களா என்று தோன்றுகிறது. சமீபகாலமாக அப்படிப்பட்ட படங்களில்தான் விஜய் நடிக்கிறார். இதையெல்லாம், யோசித்து விஜய் நடிக்க வேண்டும். முருகதாஸுக்கு விஜயகாந்த் தான் திருமணம் செய்துவைத்தார். 

கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பு, கள்ளக்குறிச்சியில் ஒரு திருமணம் நடத்திவிட்டு பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் சொன்ன வார்த்தைக்காக மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. அன்றைக்கு விஜயகாந்த் ரசிகர்கள் தங்களை யார் என்று உலகத்துக்கு நிரூபித்தனர். அதேபோல், முருகதாஸ் படத்தினால் சர்ச்சை வந்திருக்கிறது. இது, விஜய் ரசிகர்களுக்கு வேதனை அளிக்கும் விஷயமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், ‘சென்சார்’ செய்யப்பட்ட படத்தை அ.தி.மு.க-வினர் தடை செய்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு ‘குளிர்விட்டுப்போச்சு’ என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார். 

நான் சொல்றேன், ஜெயலலிதா இல்லாததால் அமைச்சர்களுக்கும் குளிர்விட்டுப்போனது. ஜெயலலிதா இருந்தபோது, அமைச்சர்கள் பாட்டு பாடினார்களா? டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார்களா? தீபாவளிக்கு பட்டாஸும், ஸ்வீட்டும் வீடு, வீடாக விநியோகம் செய்தார்களா? ஒரு திரைப்படத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் பிரச்னை ஏராளமாக இருக்கிறது. வேலைவாய்ப்புகள் இல்லை, தண்ணீர் இல்லை, டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் என எவ்வளவோ கஷ்டங்கள் இருக்கிறது. வரும் காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைத்த மக்களுக்கு அமைச்சர்கள் ஏதாவது நல்லது செய்தால் நல்லாயிருக்கும்’’ என்றார்.