வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (10/11/2018)

கடைசி தொடர்பு:11:05 (10/11/2018)

தமிழில் கேள்வித்தாள் இல்லாவிட்டால் குரூப்-2 தேர்வு நடக்காது - மே பதினேழு இயக்கம்! 

``டி.என்.எஸ்.பி. குரூப்-2 தேர்வில் அரசியல் அறிவியல்,  சமூகவியல் உள்ளிட்ட சில பாடங்களிலிருந்து கேட்கப்படும் கேள்விகள் தமிழில் கேட்கப்படாது என்றும், ஆங்கிலத்தில்தான் கேட்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்று மே பதினேழு இயக்கம் தெரிவித்துள்ளது.

``நாளை நடக்கவிருக்கும் குரூப் 2 தேர்வில் தமிழில் கேள்வித்தாள் கொடுக்காவிட்டால், தேர்வை நடத்த விடமாட்டோம்"  என்றும் அந்த இயக்கம் அறிவித்துள்ளது.

மே 17 திருமுருகன் காந்தி

இது குறித்து மே பதினேழு இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ``அரசியல் அறிவியல் (Political Science), சமூகவியல்  (Sociology) போன்ற பாடங்களில் தகுதி பெற்ற பேராசிரியர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பதாகவும், தமிழில் அந்தக் கேள்விகளை மொழிபெயர்த்து அளிக்க போதுமான பேராசிரியர்கள் இல்லை என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருப்பது போலியான மற்றும் அவமானகரமானதாகும். தமிழ் வழியில் படித்தவர்களை திட்டமிட்டு சமூக விலக்கம் செய்யும் முடிவாகவே இதைப் பார்க்க முடிகிறது.

தமிழ்நாட்டில் பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவு இணைந்த கேள்வித்தாளை எழுதுவதற்கு 4.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோர் தமிழ்வழியில் படித்த கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலோனோர் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அரசுப் பணியாளர்களாக மாறுவதுதான் கிராமப்புறங்களை முன்னேற்றும் சமூக நீதியாக இருக்கும். 

1199 பணி இடங்களுக்கு நடக்கும் இந்தத் தேர்வில், சில குறிப்பிட்ட பாடங்களுக்கான வினாக்களைத் தமிழில் அளிக்க மறுப்பதென்பது, தமிழ் வழியில் படித்த ஏழை மாணவர்களையும், இளைஞர்களையும் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யும் சதியே ஆகும். 

கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் அரசுப் பணிக்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  தேர்வை தமிழ்நாடு அல்லாத மற்ற மாநிலங்களைச் சேர்ந்தோரும் எழுதலாம் என்று அறிவித்ததின் பின்னணியில் இருந்து இந்த சதியைப் பார்க்க வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் அரசுப் பணிகளில் தமிழர்களை நீக்கிவிட்டு மற்ற மாநிலத்தவர்களைத் தேர்ச்சி பெறச் செய்யும் ரீதியில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களையும் நியமிக்கும் அதிகாரத்தில் இருப்பவர் ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய அரசின் ஆணைகளைச் செயல்படுத்தும் அடியாளாகத் தமிழ்நாட்டில் ஒரு சர்வாதிகாரத்தை மேற்கொண்டு வருவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

நாளை குரூப் 2 தேர்வு நடைபெற உள்ள நிலையில், தற்போது வெறும் வாய்மொழியாக பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழில் கேள்விகளை மொழிபெயர்க்கவும், தயாரிக்கவும் பேராசிரியர்கள் இல்லை என்று தெரிவித்திருப்பது வெட்கக் கேடானதும், அயோக்கியத்தனமானதாகும்

தமிழில் கேள்வித்தாள் முழுமையாகத் தயாரிக்கப்பட்ட பிறகுதான் குரூப்2 தேர்வு நடத்தப்பட வேண்டும். உடனடியாக தயாரிக்க முடியாவிட்டால் தேர்வுகளை ஒத்திவைப்பதே சரியானது. முழுமையாகக் கேள்வித்தாள் தமிழில் வராவிட்டால் அனைத்து ஜனநாயக சக்திகளையும் இணைத்து தமிழ்நாட்டின் உரிமையைக் காக்கும், ஜனநாயகப் போராட்டத்தை மே பதினேழு இயக்கம் முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். உடனடியாக தமிழக அரசு, முழுமையாகத் தமிழில் கேள்வித்தாளை உருவாக்கிடும் உறுதிமொழியை வழங்கிட வேண்டும்". இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க