வெளியிடப்பட்ட நேரம்: 04:10 (10/11/2018)

கடைசி தொடர்பு:11:56 (10/11/2018)

இரண்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - அ.தி.மு.க நிர்வாகி கைது!

7 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அ.தி.மு.க வட்டச் செயலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி அதிமுக நிர்வாகி கைது

திருச்சி ஆழ்வார்தோப்பு நகரைச் சேர்ந்தவர் ரசூல் முகமது. காப்பீடு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இவருக்கு 7 வயதில் சஹானா (மாணவியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது)  என்கிற மகள் உள்ளார். இவர் திருச்சி தென்னூர் காயிதே மில்லத் நகரில் உள்ள காயிதே மில்லத் எனும் தனியார் தொடக்கப்பள்ளி இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்புவரை நல்ல முறையில் பள்ளிக்குச் சென்று வந்த சஹானா, இடையில் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என அடம்பிடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும் சஹானாவின் பெற்றோர் அவரைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டாலும், நாள் முழுவதும் அழுதபடியே இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவி சஹானாவுக்கு என்னப் பிரச்னை எனத் தெரியாமல் தவித்த அவரின் பெற்றோர் ஆறுதல் கூறியபடி, சஹானாவிடம் நடந்ததை விசாரித்தனர். அப்போது சஹானா கூறியதைக் கேட்ட அவரின் அம்மா அதிர்ச்சியில் இருந்து மீளாதவராக உள்ளார்.

மழலை மொழி மாறாத சஹானா, ``கொஞ்ச நாள்களுக்கு முன்பு, எங்க பள்ளிக்கூடத்தில்  பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடந்தபோது  அந்தக் கூட்டத்தில் என்னை அழைத்த பள்ளியின் செயலாளரான சலீம்சார், அவரின் மடியில் அமரவைத்துக் கண்ட இடத்தில் கையை வைத்தார். அது எனக்கு பிடிக்கல. அதனால் அவரிடம் இருந்து வந்துட்டேன். ஆனால், அதை உங்களிடம் சொல்ல பயமா இருந்ததுமா" எனச் சொல்லி அதிரவைத்தார்.

இதுகுறித்து சஹானாவின் பெற்றோர் விசாரித்ததில், பள்ளியின் செயலாளராகவும், அ.தி.மு.க வட்டச் செயலாளராகவும் செக்கடி சலீம் என்பவர் இருந்து வருகிறார். இவர் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு நடந்த பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் மாணவிகளிடம் பாலியல் செயலில் ஈடுபட்டதும், அவரிடமிருந்து மாணவி சஹானா விடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து இன்று காலை தங்கள் பகுதியில் இருந்த மக்களைத் திரட்டி வந்து மாணவி படிக்கும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
செக்கடி சலீம்

அப்போது இரண்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அ.தி.மு.க நிர்வாகியை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் ராமச்சந்திரன் தில்லைநகர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் சிவசுப்பிரமணியம் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீஸார் உரிய விசாரணை நடத்திச் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

அடுத்துக் குற்றச்சாட்டுக்குள்ளான சம்பந்தப்பட்ட அ.தி.மு.க நிர்வாகி செக்கடி சலீமை தில்லை நகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

மேலும் ஸ்ரீரங்கம் மகளிர் காவல் ஆய்வாளர் சித்ரா தலைமையிலான போலீஸார் அந்தப் பள்ளி மாணவியிடம் விசாரணை செய்ததில் சம்பவம் நடந்தது உண்மை என்பதைத் தெரிந்துகொண்ட போலீஸார், செக்கடி சலீமை  போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

செக்கடி சலீம் லோக்கல் அமைச்சருக்கு நெருக்கமானவர் என்பதாலும், அவர் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருப்பதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க