வெளியிடப்பட்ட நேரம்: 05:31 (10/11/2018)

கடைசி தொடர்பு:11:10 (10/11/2018)

`நல்லக்கண்ணு தலைமையில் மணல் குவாரியை இழுத்து மூடுவோம்' - கொந்தளித்த முகிலன்!

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் திருவள்ளுவர் திருமண மண்டபத்தில் இயற்கை செயற்பாட்டாளர் முகிலன் வழிகாட்டுதலோடு நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த வாங்கல் விசுவநாதன் தலைமை வகித்தார். 

ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த கே.சி.ஆர்.சண்முகம் வரவேற்றார். காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் முகிலன் கூட்டத்தை வழிநடத்தினார். இந்தக் கூட்டத்தில் பேசிய முகிலன், ``கரூர் மாவட்டத்தில் உயர் நீதிமன்றத்தால், 'இயங்குவதற்குத் தகுதியான மணல்குவாரி அல்ல' என்று கூறப்பட்ட மணத்தட்டை மணல் குவாரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதைத் தடுத்து நிறுத்தக் கோரியும், அனுமதி இன்றி குளித்தலை - ராஜேந்திரத்தில் அரசு மணல் கிடங்கு இயங்குவதை மூடக்கோரியும் முடிவெடுக்க இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. பொதுமக்கள், மக்கள் இயக்கங்கள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றை இணைத்து குளித்தலையில் வருகின்ற 15-11-2018 வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்குக் குளித்தலை கண்ணன் திருமண மண்டபத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது. அந்த கலந்தாய்வு கூட்டத்தில் அய்யா நல்லகண்ணு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளார். அந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, மணல் குவாரியைத் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட இருக்கிறோம்.
 
கரூர் மாவட்டத்தில் அரசே நேரடி பொறுப்பேற்று நடத்த முடிவு செய்த ஐந்து மணல் குவாரிகளில் தற்போது மாயனுர் மற்றும் மணத்தட்டை ஆகிய இரண்டு இடங்களுக்கு மட்டுமே மணல் அள்ளும் அனுமதி காலம் உள்ளது. இதில் மாயனுர் தடுப்பணையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் அங்கு மணல் அள்ள முடியவில்லை. கடந்த வாரம் முதல் காவிரி ஆற்றில் மணல் அள்ளப்பட்டுக் குளித்தலை- ராஜேந்திரத்தில் தற்போது அரசு மணல் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது. மணத்தட்டை மணல் குவாரி இயங்குவதற்குத் தகுதியான மணல்குவாரி அல்ல என்றும், மணத்தட்டை  மணல் குவாரி எல்லைக்குள் மணப்பாறை கூட்டுக் குடிநீர் திட்டம் 430 மீட்டர் தொலைவில் உள்ளது என  ஏற்கெனவே ஆதாரபூர்வமாக ஆய்வுக் குழுவால் அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால், இந்த மணல் குவாரியை இயக்க அனுமதிக்கக் கூடாது என்று கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகனிடம் பலமுறை மனு கொடுத்தும், அவரை ஆளும் கட்சியைச் சேர்ந்த சக்திகள் நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்து வருகிறார்கள். அதனால், நல்லக்கண்ணு அய்யா தலைமையில் போராடி இந்த மணத்தட்டை மணல் குவாரியையும், குளித்தலை-ராஜேந்திரம் மணல் கிடங்கையும் இழுத்து மூடுவோம்" என்றார்.