வெளியிடப்பட்ட நேரம்: 06:04 (10/11/2018)

கடைசி தொடர்பு:11:15 (10/11/2018)

புதுக்கோட்டையில் அனுமதியின்றி பார்கள்? ஆட்சியர் அறிக்கை தர உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் பார்கள், அவற்றின் அமைவிடங்கள்,  அனுமதியின்றி செயல்படும் பார்கள் உரிமங்களின் நிலை குறித்தும் புதுக்கோட்டை ஆட்சியர் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த சேர்ந்த அண்ணாதுரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ``புதுக்கோட்டை மாவட்டத்தில் 205 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இந்த 205 கடைகளுக்கும் உரிய உரிமம் பெற்று, உரியத் தொகையை  நிர்வாகத்துக்குச் செலுத்தி பார் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், 150 பார்கள் உரியத் தொகையை டாஸ்மாக் நிர்வாகத்துக்குக் கட்டாமல் அனுமதியின்றி இயங்கி வருகிறது. இதனால், அரசுக்கு 2 கோடி ரூபாய் வரையிலும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, மாவட்டத்தில் குளத்தூர் தாலுகாவில் உள்ள பல டாஸ்மாக் கடைகளில் உரிய உரிமம் இல்லாமலும் அரசுக்குக் கட்ட வேண்டிய தொகை செலுத்தாமலும் பார்கள் இயங்கி வருகின்றன. உரிய உரிமம் பெறாமலும், அரசுக்குப் பணம் கட்டாமலும் இயங்கும் பார்களை மூட உத்தரவிட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

இந்த மனுவானது நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், மாவட்டத்தில்  அனுமதி பெற்று இயங்கும் பார்களின் விவரங்கள், அவற்றின் அமைவிடம், உரிமங்களின் காலக்கெடு குறித்தும், அனுமதி பெறாமல் இயங்கும் பார்களின் விவரங்கள் குறித்தும் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.