`உங்கள் ஊரில் குடிக்க நல்ல தண்ணீர் இல்லை' - விஜயபாஸ்கரை அதிரவைத்த தம்பதி! | there is no drinking water in tn Health Minister's own village

வெளியிடப்பட்ட நேரம்: 06:56 (10/11/2018)

கடைசி தொடர்பு:11:20 (10/11/2018)

`உங்கள் ஊரில் குடிக்க நல்ல தண்ணீர் இல்லை' - விஜயபாஸ்கரை அதிரவைத்த தம்பதி!

சுகாதாரத்துறை அமைச்சர் ஊரில், சுகாதாரம் இல்லாத தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்தும் அவல நிலை உள்ளதாகப் புதுக்கோட்டை வந்த சுகாதாரத்துறை அமைச்சரிடம்  தம்பதி  முறையிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை ராணியார் பள்ளியில் நடைபெற்ற காய்ச்சல் தடுப்பு விழிப்பு உணர்வு முகாமில் கலந்துகொள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை வந்தார். அப்போது, அவரைச் சந்திக்க, சம்பட்டி விடுதியைச் சேர்ந்த ராமதாஸ் - ராஜகுமாரி தம்பதி அழுக்கு நிறைந்த குடிநீர் பாட்டில் மற்றும் மனு உடன் பள்ளியில் நீண்ட நேரம் காத்திருந்தனர். தம்பதியிடம் இதுகுறித்து கேட்டறிந்த காவல்துறை மற்றும் அதிகாரிகள்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குச் சென்று மனு அளிக்குமாறு வலியுறுத்தினர். விரைவில் நல்ல குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர் வரும் நேரம் தற்போது இங்கிருந்து செல்லுங்கள் என்றும் வலியுறுத்தினர். தம்பதி அமைச்சரைச் சந்திக்காமல் இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம் எனப் பிடிவாதமாக இருந்தனர். 

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அமைச்சரிடம் எதிர்ப்பையும் மீறி முறையிட்டதுடன் மனுவும் அளித்தனர். அந்த மனுவில், ‘புதுக்கோட்டை மாவட்டம்  சம்பட்டி விடுதியில் குடிதண்ணீர் ஆழ்குழாய்க் கிணறும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் உள்ளது. குடிதண்ணீர் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிதண்ணீர் செம்மண் கலந்து சாக்கடை நீரைப்போல, பொதுமக்கள் பயன்படுத்தாத நிலையில் உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இப்பிரச்னை உள்ளது. இதை, பயன்படுத்துவதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்படுகிறது. இந்த தண்ணீரின் காரணமாகவே பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பாதுகாப்பான சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தனர். 

மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உடனே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதோடு, ஊராட்சிகள் திட்ட இயக்குநர் மற்றும் அதிகாரிகள்  சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு நல்ல தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.