வெளியிடப்பட்ட நேரம்: 09:49 (10/11/2018)

கடைசி தொடர்பு:13:29 (10/11/2018)

``மிக்ஸி, கிரைண்டர் எப்படி உதவுச்சுனு பெண்கள்ட்ட கேளுங்க!"

`மக்களின் வரிப்பணத்தில்தான், நலத்திட்டங்களை வழங்குகிறோம். எனவே, இலவசத்திட்டங்கள் எனச் சொல்லக்கூடாது. விலையில்லா பொருள்கள் வழங்கும் திட்டம் என்று சொல்ல வேண்டும்' என்றுதான் ஜெயலலிதா அம்மா எங்களுக்கு அறிவுரை வழங்குவார்.

``மிக்ஸி, கிரைண்டர் எப்படி உதவுச்சுனு பெண்கள்ட்ட கேளுங்க!

'சர்கார்' திரைப்படக் கதை விவகாரத்தில் தொடங்கிய சர்ச்சை, படம் ரிலீஸான பிறகும் தொடர்கிறது. படத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் வசனங்களும், காட்சிகளும் இருப்பதாகக்கூறி, அ.தி.மு.க-வினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல சர்ச்சைக்குரிய சில காட்சிகளுக்கு அ.ம.மு.க-வினர் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். 'சர்கார்' பட விவகாரம் தொடர்பாக, 'அ.தி.மு.க'வின் நிர்மலா பெரியசாமி மற்றும் 'அ.ம.மு.க' சி.ஆர்.சரஸ்வதியிடமும் பேசினோம்.

நிர்மலா பெரியசாமி, அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர்.

``ஜெயலலிதா அம்மாவை, எங்களைப் பெற்ற தாய்க்கும் மேலாக மதிக்கிறோம். அவரின் இயற்பெயரான கோமளவள்ளியை, 'சர்கார்' படத்தில் வரும் வில்லியின் பெயராக வைத்திருக்கிறார்கள். அரசியல்'சர்கார்' பற்றி நிர்மலா பெரியசாமி படத்தில், கோமளவள்ளி என்ற பெயரை தவறாகப் பயன்படுத்தியது தவறு. நலத்திட்டங்கள் பற்றிய சரியான புரிதல் இல்லாமல், ஆளும்கட்சியைத் தவறான கண்ணோட்டத்தில் படமெடுத்தால் வைரலாகப் பேசப்படும் என்று உள்நோக்கத்துடன்தான் சர்கார்' படத்தை எடுத்திருக்கிறார்கள். 'இலவசங்களை நம்பி இருக்கும் அளவுக்கு மக்களை இன்னும் ஏன் இப்படி வைத்திருக்கிறீர்கள்?' என்ற வசனம் `சர்கார்' படத்தில் இடம்பெறுகிறது. வளர்ந்து வரும் நம் நாட்டில், இன்னும் முழுமையான வளர்ச்சி ஏற்படவில்லை. அதனால், ஏழ்மை நிலையிலுள்ள மக்களின் வாழ்க்கை நிலை மேம்பட நலத்திட்ட உதவிகள் வழங்குவது முக்கியம்தான். காமராஜர் காலத்திலிருந்தே ஏழை மக்களின் வளர்ச்சிக்கான இலவசத் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பசியில் இருக்கும் நம் மக்களுக்கு முதலில் மீன் கொடுத்து பசியைப் போக்கிய பிறகுதான், மீன் பிடிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். அதைத்தான் அரசும் செய்கிறது. 

ஜெயலலிதா அம்மா வழங்கிய மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி இல்லாத வீடுகள் குறைவே; சைக்கிள், மடிக்கணினிகள் பெற்று பயன்பெறாத மாணவர்கள் குறைவே. மிக்ஸி, கிரைண்டர் எப்படி உதவுச்சுனு பெண்கள்கிட்ட கேட்டுப் பாருங்க. இப்படிப் பல கோடிப் பேர் அரசின் இலவச திட்டங்களால் பயன்பெற்றிருக்கின்றனர். அவர்களையெல்லாம், `சர்கார்' படத்தின் சில வசனங்களால் மிகவும் கேவலப்படுத்திவிட்டனர். ஜெயலலிதா அம்மா இறந்துவிட்டாலும், அவர்களின் வழியே நாங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். அதனால் அம்மாவின் புகழுக்கு களங்கம் வரும் வகையில் யார் செயல்பட்டாலும் நாங்கள் பொறுமையாக இருக்க மாட்டோம். சினிமாத் துறையினர் அரசின் கேளிக்கை வரியை பெற்றுத்தான் படங்களை வெளியிடுகின்றனர். சினிமா நூற்றாண்டு விழா நடத்த ஜெயலலிதா அம்மா 10 கோடி நிதியுதவி செய்தார். சினிமாத் துறையினர் அரசிடம் ஏராளமான உதவிகளைப் பெற்றுக்கொண்டு, அரசை உள்நோக்கத்துடன் தவறாக விமர்சிப்பது எப்படி நியாயமாகும்? அதனால்தான் அ.தி.மு.க தொண்டர்கள் தன்னெழுச்சியாகப் போராட்டம் நடத்திவருகின்றனர். அதனால், தற்போது `சர்கார்' படத்தில் சர்ச்சைக்குரிய சில காட்சிகளை நீக்கத் தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இனி இவ்விவகாரம் அமைதியாகிவிடும் என நினைக்கிறேன். 'விஜய் அரசியலுக்கு வரவிருக்கிறார் என்பதால், உங்களுக்குப் பயம்' எனச் சிலர் சொல்கிறார்கள். இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியான எங்களுக்கு, அரசியல் நிலைப்பாட்டையே இதுவரை வெளிப்படையாகச் சொல்லாத நடிகர் விஜய்யைப் பார்த்து பயம் என்ற பேச்சு மிகப்பெரிய நகைச்சுவை. யார் வேண்டுமானாலும் அரசியல் படம் எடுக்கலாம்; கிண்டல் செய்யலாம். ஆனால், கருத்துச் சுதந்திரத்துக்கு எல்லை உண்டு. அதை மீறி, பொறுப்பு உணர்வு இல்லாமல், மக்களின் அன்பைப் பெற்ற தலைவர்களின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எம்.ஜி.ஆரைப் போல ஆக வேண்டும் என நினைப்பவர்கள், அவர் வழியே நிறைய நல்ல குணங்களை முதலில் வளர்த்துக்கொள்ளுங்கள்".

சி.ஆர்.சரஸ்வதி, அ.ம.மு.க செய்தித் தொடர்பாளர்.

`` `சர்கார்' விவகாரம் தொடர்பாக, எங்கள் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் விளக்கம் கொடுத்துவிட்டார். கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி படம் எடுப்பதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், சி.ஆர்.சரஸ்வதிமிக்ஸி, கிரைண்டரை எரிக்கும் காட்சியை வைத்தவர்கள், தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச டிவியையும் எரித்திருந்தால் நடுநிலையான கண்ணோட்டத்தில் இருக்கும். மாறாக, எங்கள் மதிப்புமிக்க தலைவர் ஜெயலலிதா அம்மா கொண்டுவந்த திட்டத்தையும், அவர் புகழையும் கெடுக்கும் வகையில் செயல்படுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. 'மக்களின் வரிப்பணத்தில்தான், நலத்திட்டங்களை வழங்குகிறோம். எனவே, இலவசத்திட்டங்கள் எனச்சொல்லக்கூடாது. விலையில்லாப் பொருள்கள் வழங்கும் திட்டம் என்று சொல்ல வேண்டும்' என்றுதான் ஜெயலலிதா அம்மா எங்களுக்கு அறிவுரை வழங்குவார். அந்த அளவுக்கு அம்மா கொண்டுவந்து, வெற்றி பெற்ற திட்டங்களைத் தவறாகச் சித்திரிப்பது முறையற்றது. அரசியல் கதையுடன் படமெடுப்பவர்கள் முழுமையான புரிதலுடன் படம் எடுக்க வேண்டும். தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தால், மடிக்கணினி திட்டம், சைக்கிள் திட்டத்தால் எத்தனை லட்சம் ஏழைக் குடும்பத்தினர் பயன்பெற்றார்கள் என `சர்கார்' படக்குழுவினருக்குத் தெரியுமா? 

இப்போது இருக்கிற ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அரசு, ஜெயலலிதா அம்மாவின் திட்டங்களை செயல்படுத்துவதே இல்லை. அம்மா கொண்டுவந்த சிறப்பான 'அம்மா உணவகம்' திட்டத்தை மோசமான பாதைக்கு கொண்டுசென்றுவிட்டனர். இவர்கள் எல்லாம், அம்மாவின் புகழ் பாதிக்கிறது என நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். அம்மா இருக்கும்போதே விஜய் நடித்துக்கொண்டுதான் இருந்தார்; முருகதாஸ் படங்களை இயக்கிக்கொண்டுதான் இருந்தார். அப்போதெல்லாம் அம்மாவின் ஆட்சித்திறனை மையப்படுத்தி திரைத்துறையினரால் படம் எடுக்க முடிந்ததா? அவ்வளவு ஏன், அம்மாவைப் பற்றி எதிர்மறையாகப் பேச முடிந்ததா? அப்போது பயந்துபோய் இருந்தவர்கள், இப்போது அம்மாவின் புகழைப் பாதிக்கும் வகையில் தவறான கருத்துகளைச் சொல்வது தவறு. சினிமா துறையினர் தங்கள் பொறுப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும். அதேபோல ஆட்சியில் இருப்பவர்கள், 'சர்கார்' படம் போன்ற சர்ச்சைக்குரிய விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளைத்தான் மேற்கொள்ள வேண்டும். மாறாக, கட்சினரை அனுப்பி தியேட்டரை முற்றுகை இடுவது, படத்தைத் திரையிட விடாமல் செய்வது, போஸ்டர்கள் மற்றும் பேனர்களை கிழிப்பது, சட்ட ஒழுங்குக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செய்வது எல்லாம் தவறான முன்னுதாரணம்". 


டிரெண்டிங் @ விகடன்