குலசை தசரா திருவிழா உண்டியல் வசூல் ரூ.2.60 கோடி! | kulasai dhasara festival collction amount is rupees 2.60 crore

வெளியிடப்பட்ட நேரம்: 09:35 (10/11/2018)

கடைசி தொடர்பு:11:51 (10/11/2018)

குலசை தசரா திருவிழா உண்டியல் வசூல் ரூ.2.60 கோடி!

குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயில் தசரா பெருந்திருவிழாவில் இந்த ஆண்டு உண்டியல் காணிக்கை வசூலாக ரூ.2,60,92,496 கோடி கிடைத்துள்ளது. இது, கடந்த ஆண்டு வசூலான தொகையைவிட  ரூ.38,54,683 அதிகமாகும்.  

     குலசை தசரா

இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம், அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில்தான் தசரா பெருந்திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தசரா திருவிழா, கடந்த செப்டம்பர் 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 19-ம் தேதி இரவு மகிஷாசூரசம்ஹாரம் வரை 10 நாள்கள் விமரிசையாக நடைபெற்றது. இதில், தூத்துக்குடி மாவட்டம் மட்டுமில்லாமல் நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் என தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் வேடமணிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருக்கோயில் வளாகத்தில் ஏற்கெனவே 13 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. தசரா திருவிழாவை முன்னிட்டு, கூடுதலாக 57 தற்காலிக உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், தசரா திருவிழா கடந்த மாதம் நிறைவு பெற்றதை முன்னிட்டு, உண்டியல்களில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. சங்கரன்கோயில், சங்கர நாராயணசுவாமி திருக்கோயில் துணைஆணையர் செல்லதுரை தலைமையில் பிற 5 கோயில்களின் உதவி ஆணையர்கள் தலைமையில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.  

இதில், தன்னார்வலர்கள், திருக்கோயில் பணியாளர்கள், ஆன்மிகக் குழுவினர் ஆகியோர் கலந்துகொண்டு உண்டியல்களில் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். நிரந்தர உண்டியல்கள் மற்றும் தற்காலிக உண்டியல்கள் என மொத்தம் உள்ள 70 உண்டியல்கள் மூலம் காணிக்கையாக ரூ.2,60,92,496 கோடி கிடைத்துள்ளது. வெள்ளி 2 கிலோ 951 கிராமும், தங்கம் 200 கிராமும் இருந்தது. உண்டியல் காணிக்கை மூலம் வசூலான தொகை, கடந்த ஆண்டு வசூலான தொகையைவிட ரூ.38,54,683 அதிகமாகும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க