வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (10/11/2018)

கடைசி தொடர்பு:14:10 (10/11/2018)

இலவச மிக்ஸி, கிரைண்டர்.. 'சர்கார்' பற்ற வைத்த நெருப்பு! தமிழகப் பெண்களின் பதில் என்ன?

“எளிய மக்கள்ட்டயும் ஈஸியா போய்ச் சேருற திரைப்படம் மூலமா நீங்க எல்லாரும் பிச்சை வாங்கியிருக்கீங்க என்கிற குற்ற உணர்ச்சியை இயக்குநர் ஏற்படுத்தியிருக்காரு. ஆனா, உண்மையிலேயே இந்தப் படத்துக்கு, அதிக விலைக்கு விற்ற டிக்கெட் மூலமாக கோடி கோடியா பணம் சேர்க்கிறவங்களுக்கு, இதைச் சொல்ல ஒரு தகுதியும் இல்லை!”

இலவச மிக்ஸி, கிரைண்டர்.. 'சர்கார்' பற்ற வைத்த நெருப்பு! தமிழகப் பெண்களின் பதில் என்ன?

தீபாவளி அன்று 'சர்கார்' பற்ற வைத்த நெருப்பு தமிழகம் முழுவதும் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக, இலவசங்களைப் பற்றிய வசனங்களும் காட்சிகளும் அரசியல்வாதிகள் மத்தியில் தணியாமல் கனன்று கொண்டிருக்க, இதுவரையிலும் அரசு வழங்கிய இலவசப் பொருட்களைப் பற்றி, தமிழகப் பெண்கள் என்ன நினைக்கிறார் என்பதை அறிய சிலரிடம் பேசினோம். 

அகிலா, கோவை

அகிலா“நான் தினமும் என் வீட்டுல இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்துல இருக்கிற ஸ்கூலுக்குப் பஸ்லதான் போய்ட்டு வருவேன். எங்க கிராமத்துல இருந்து மொத்தம் 10 பேர்தான் போய் வருவோம். பள்ளி திறந்த முதல் ஒரு மாசம் பஸ் பாஸ் இல்லாம என்னோடு வர்ற தோழிங்க எவ்வளவு சிரமப்படுவாங்க தெரியுமா? அவங்களோட அப்பாவோ, அம்மாவோ அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்ககிட்டதான் கடனா காசு வாங்கிக் கொடுப்பாங்க. பஸ் பாஸ் வந்ததுக்குப் பிறகுதான் சிரமம் இல்லாம போயிட்டு வருவாங்க. 

இப்போ நான் வேலைக்கு வந்த பிறகுதான் அதுவும் கம்பெனி கொடுத்த லேப்டாப்பைத்தான் யூஸ் பண்றேன். ஆனா, படிக்கிறப்போ லேப்டாப் எல்லாம் நம்ம வசதிக்கு நினைச்சுப் பாக்க முடியாத ஒன்னாத்தானே இருந்துச்சு. படிக்கிற மாணவர்களா இருக்கட்டும், வேலைக்குப் போறவங்களா இருக்கட்டும் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியமானதை வாங்க வாய்ப்பே இல்லாத சூழல்ல அரசு ஒரு சோர்ஸை ஏற்படுத்திக் கொடுத்தாங்க. அவங்க கொடுத்த வாய்ப்பு மூலமா நம்ம அறிவை வளர்த்துக்கிட்டு அவங்களையே எதிர்த்து கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கிறோம். அதோட, இலவசத் திட்டம்ங்கிறது தமிழ்நாட்டுல மட்டும் கிடையாது. அது இந்தியா முழுவதுமே இருக்கத்தான் செய்யுது. பிரிட்டிஷ்காரன்கிட்ட இருந்து சுதந்திரம் வாங்கின ஒரு நாட்டுல பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தானே செய்யும். மக்களோட வரிப்பணத்துல இருந்து மக்களுக்கே செய்யுற திட்டங்களை எல்லாம் தூக்கி எறிஞ்சிட்டா எல்லாம் சரி ஆகிடுமா? 

எளிய மக்கள்ட்டயும் ஈஸியா போய்ச் சேருற திரைப்படம் மூலமா நீங்க எல்லாரும் பிச்சை வாங்கியிருக்கீங்கங்கிற குற்ற உணர்ச்சியை இயக்குநர் ஏற்படுத்தியிருக்காரு. ஆனா, உண்மையிலேயே இந்தப் படத்துக்கு, அதிக விலைக்கு விற்ற டிக்கெட் மூலமாக கோடி கோடியா பணம் சேர்க்கிறவங்களுக்கு, இதைச் சொல்ல ஒரு தகுதியும் இல்லை” என்கிறார் ஆக்ரோஷமாக. 

சர்கார்

வள்ளியம்மை, காரைக்குடி 

வள்ளியம்மை“என்னைப் பொறுத்தவரை இலவசங்கள் தேவையில்லை என்றுதான் சொல்லுவேன். அதே நேரத்தில் எது அத்தியாவசியம் என்று ஒன்று இருக்கிறது. மக்களுக்குத் தேவையான கல்வி, மருத்துவம், உணவு போன்ற அவசியமானவற்றிற்கு கொடுக்கப்படும் இலவசத் திட்டங்களை வரவேற்கலாம். வெளி மாநிலங்களில் டி.வி, மிக்ஸி கொடுப்பதற்குப் பதிலாக தரமான பருப்பு, அரிசி போன்றவற்றைக் கொடுக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் ஆடம்பரத்திற்காகச் செலவழிக்கிறார்கள். அதுவும் டாஸ்மாக் வருமானத்தில் இருந்து. இது நமக்கெல்லாம் எப்படிப்பட்ட குற்றஉணர்ச்சியைக் கொடுக்கணும். நம்மை விட இப்படி ஒரு திரைப்படத்தை எடுத்தவர்களுக்குத்தான் குற்றஉணர்வு அதிகமாக இருக்க வேண்டும். ஏன்னா, இலவசங்கள் வேண்டாம் என்பதை ஒரு திரைப்படத்தின் மூலம் சொல்லும்போது அதைச் சரியான நேரத்தில் சொல்லியிருக்க வேண்டும்.

மிக்ஸியோ, கிரைண்டரோ, டி.வியோ எது கொடுப்பதாக இருந்தாலும் அந்தத் திட்டத்தை அமல்படுத்தும்போதே தைரியமாக எதிர்த்துக் குரல்கொடுத்திருக்கனும். அதைவிட்டுவிட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வைத்த இருபெரும் தலைவர்கள் இல்லாதபோது பேசுவது தவறு. இலவசங்கள் வேண்டாம். அதைத் தூக்கி எறிவோம் என்று சொல்வதற்குப் பதிலாக இனி இலவசங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்பதை வலியுறுத்திச் சொல்லியிருக்கலாம். இது மறைந்த அந்தத் தலைவர்களை விமர்சிப்பதோடு பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களையும் வஞ்சிப்பது போல உள்ளது”. 

நர்மதா நந்தகுமார், சென்னை

நர்மதா“இப்போதான் சர்கார் படத்துல இலவசப் பொருட்களைத் தூக்கி எறிவோம்னு சொல்லியிருக்காங்க. ஆனா, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஜெயலலிதா மேடம் உயிரோட இருக்கும்போதே இலவசப் பொருட்களை வேண்டாம்னு சொல்லி திருப்பிக் கொடுத்தவள் நான்” என்று அதிரடியாக ஆரம்பிக்கிறார் சென்னையைச் சேர்ந்த நர்மதா. 

“டாஸ்மாக் மூலமா வர்ற எந்த ஒரு இலவசங்களும் எனக்குத் தேவை இல்லைனு 2016 லயே நான் வீதியில நின்னு மிக்ஸி, கிரைண்டரைத் திருப்பிக் கொடுத்தேன். இப்போ வரை என் வீட்டுல மிக்ஸி கிடையாது. ஏதாவது எமர்ஜென்சினா கூட அம்மியிலதான் அரைக்கிறேன். அதுமட்டுமில்ல, எதுக்காக இலவசப் பொருட்களை எல்லாம் பெண்கள் அதிகமா உபயோகிக்கிற பொருட்களா பார்த்து கொடுத்தாங்கன்னா அவங்கதான் ஈஸியா செண்ட்டிமெண்ட்ல விழுந்திடுவாங்க. தினமும் மிக்ஸி, கிரைண்டர்னு அவங்க யூஸ் பண்ற பொருட்கள்ல அந்த தலைவரோட முகத்தைப் பார்த்துட்டே இருக்கணுமில்லையா. உண்மையாவே மக்களுக்கு நல்லது பண்ணனும்னு நினைச்சு இலவசங்களைக் கொடுத்திருந்தா அவங்க படத்துக்கு பதிலா தமிழக அரசோட கோபுர சின்னத்தை போட்டுருக்கலாமே. இலவசம்ங்கிறது அவங்களுக்கு ஓட்டு. பராசக்தி படத்துலகூட ரங்கூன்ல இருந்து சிவாஜி கப்பல்ல சென்னை வந்து இறங்கினதும் ஒருத்தர் பிச்சை கேட்பார். அது இந்தச் சமூகத்தோட அவல நிலையைத்தானே காட்டியிருந்துச்சு. அப்போ இருந்து இப்போ வரை ஆட்சி செய்த ரெண்டு கட்சிகளும் நம்ம மக்களை அவங்ககிட்ட பிச்சை எடுக்கவே வெச்சிட்டு இருக்கு”. 

கண்ணம்மா, திருநெல்வேலி

கண்ணம்மா“நான் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவ. திருநெல்வேலி மாவட்டத்துல இருக்கிற ஒரு சின்ன கிராமம்தான் என்னோடது. என் வீட்டுல இருந்து பஸ் பிடிக்கவே 2 மைல் தூரம் நடந்துதான் போகணும். அங்கேருந்து 7 கிலோமீட்டர் தள்ளிதான் ஸ்கூல். பொம்பளைப்பிள்ளைங்க தினமும் இப்புடி ரெண்டு மைல் தொலைவு நடந்தா ஒடம்புக்கு என்ன ஆகும். அதோட, ஸ்கூல்ல கோச்சிங் க்ளாஸ் எல்லாம் வெச்சா வீட்டுக்கு வரதுக்குள்ள இருட்டிடும்னு சொல்லியே நிறைய பிள்ளைங்களோட வீட்டுல பள்ளிக்கூடத்துக்கே அனுப்ப மாட்டாங்க. அந்த நேரத்துலதான் இலவச சைக்கிள் வழங்குற திட்டத்தைக் கொண்டு வந்தாங்க. 

சைக்கிள் வந்ததுக்குப் பிறகு, நிறைய பிள்ளைங்க ஸ்கூலுக்கு வர ஆரம்பிச்சிட்டாங்க. வீட்டுல இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை சைக்கிள்லயே போயிடுவோம். அங்க இருந்து பஸ் புடிச்சு ஸ்கூல் போவோம். பஸ்லகூட பாஸ் கொடுத்ததால ரொம்ப வசதியா இருந்துச்சு. தெனமும் அப்பா, அம்மாகிட்ட காசுக்காக எதிர்பாக்காம பள்ளிக்கூடம் போயிட்டு வந்தோம். இப்போ நான் சென்னையில ஒரு தனியார் நிறுவனத்துல வேலை பார்க்கிறேன். அன்னிக்கு மட்டும் சைக்கிள், பஸ் பாஸ், லேப்டாப்னு எதுவும் இல்லாம இருந்திருந்தா கல்யாணம் முடிஞ்சு ஊருக்குப் பக்கத்துலயே எங்கேயாவது பொழப்பை ஓட்டியிருப்பேன். அப்போக்கூட அரசாங்கம் கொடுத்த மிக்ஸி, கிரைண்டர்லதான் வாழ்க்கை ஓடியிருக்கும்”. 

வாசகர்களே, இலவசத்திட்டங்கள் பற்றிய உங்கள் பார்வை என்ன என்பதை கமென்ட்டில் பதிவிடுங்கள்... 


டிரெண்டிங் @ விகடன்