வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (10/11/2018)

கடைசி தொடர்பு:14:09 (11/11/2018)

`ரூ.5.78 கோடியா... நஹி மாலும் ஜி...' - போலீஸாரைக் கடுப்பேற்றிய ரயில் கொள்ளையர்கள் 

ரயில் கொள்ளை

ரயில் கொள்ளையர்களை போலீஸ் காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், கொள்ளையர்களிடம் துருவித் துருவி விசாரித்தனர். அவர்களிடமிருந்து எந்தத் தகவலையும் பெற முடியாததால் விசாரணை அதிகாரிகளில் சிலர் கடுப்பில் உள்ளனர்.

சேலத்திலிருந்து சென்னை நோக்கி கடந்த 8.8.2016-ல் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், 5 கோடியே 78 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மத்தியப்பிரதேசம், ரட்லத்தைச் சேர்ந்த தினேஷ், ரோஹன்பார்தி ஆகிய இருவரையும் கடந்த 12-ம் தேதி சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைதுசெய்தனர். இதைத்தொடர்ந்து கொள்ளைக் கும்பலின் தலைவன் மோஹர்சிங் உட்பட சிலரை  போலீஸார் கைது செய்தனர். கைதானவர்களை போலீஸ் காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், அவர்களிடம் துருவித் துருவி விசாரித்துவருகின்றனர். ஆனால், அவர்களிடமிருந்து எந்தத் தகவலையும் போலீஸாரால் பெற முடியவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் கூறுகையில், ``கடந்த 2 ஆண்டுகளாக நடந்த  புலன் விசாரணைக்குப்பிறகு ரயில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை மத்தியப் பிரதேசத்திலிருந்து கைது செய்து சென்னைக்கு அழைத்துவந்தோம். இந்தக் கொள்ளை கும்பலுக்குத் தலைவனான மோஹர்சிங், ஏற்கெனவே ஒரு வழக்கில் கைதாகி மத்தியப் பிரதேச மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவரையும் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தோம். அவர்களிடம் விசாரித்தபோது எந்தத் தகவலையும் சொல்லாமல் அமைதியாக இருக்கின்றனர். இதனால், கொள்ளையடிக்கப்பட்ட பணம் குறித்து எந்தத் தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. கைது செய்யப்பட்டவர்களை சிறையில் அடைத்தபிறகு போலீஸ் காவலில் எடுத்து பணம் குறித்து விசாரித்துவருகிறோம். இந்தி தெரிந்த போலீஸார் மூலம் அவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது.

கொள்ளையடித்த பணத்தை என்ன செய்தீர்கள் என்று ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரித்தோம். அப்போது அவர்கள் எல்லோரும் நஹி மாலும் ஜி என்று சொல்கின்றனர். அதோடு, இந்தக் கொள்ளைச் சம்பவத்துக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் கூறுகின்றனர். இதனால், அவர்களிடமிருந்து எங்களால் உண்மையை வெளியில் கொண்டுவர முடியவில்லை. இருப்பினும் கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு நகைகள், சொத்துகள் வாங்கியிருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அந்த விவரங்களை மத்தியப் பிரதேசத்தில் உள்ள போலீஸார் மற்றும் அதிகாரிகள் மூலம் சேகரித்துவருகிறோம். இந்தச் சூழ்நிலையில் விசாரணையிலிருந்து தப்பிக்க ஒரு கொள்ளையன், தனக்கு வயிற்று வலி என்று எங்களிடம் தெரிவித்தார். உடனே அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தோம். அப்போது அவர் விசாரணைக்குப்பயந்து வயிற்று வலி என்று நாடகமாடியது தெரியவந்தது. ரயில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பார்தி இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களிடம் இருந்து எளிதாக உண்மையை வாங்க முடியாது என்று மத்தியப் பிரதேச போலீஸார் எங்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் கூறிய டெக்னிக்படி விசாரணை நடத்தவுள்ளோம்" என்றனர். 

 ரயில் கொள்ளை

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``ரயில் கொள்ளை ஆகஸ்ட் மாதம் நடந்தது. அதன்பிறகு நவம்பர் மாதத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை  எடுக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை கொள்ளையர்கள் எப்படி மாற்றினார்கள் என்பதுதான் எங்களுடைய முக்கிய கேள்வியாக உள்ளது. இருப்பினும் ரயிலில் பணம் கொண்டு செல்லப்படும் தகவல் யார் மூலம் கொள்ளையர்களுக்குத் தெரியவந்தது. துப்பு கொடுத்தவர்கள் குறித்து கொள்ளையர்களிடம் விசாரித்தபோது அவர்கள் நஹி மாலும் என்று சொல்கிறார்கள்.

 ரயிலின் மேற்கூரையில் எப்படி துளைபோட்டு கொள்ளையடித்தார்கள் என்பது குறித்து விசாரிக்க கொள்ளையர்களை சம்பவம் நடந்த இடத்துக்கு இன்று காலை அழைத்துச் சென்றோம். முதலில் விருத்தாசலம் சின்னசேலம், சேலம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்றபோது கொள்ளை நடந்தது எப்படி என்பதைக் கொள்ளையர்கள் நடித்துக் காட்டினர். அதை நாங்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளோம். தற்போது நடத்தப்படும் விசாரணை மிகவும் முக்கியமானது. அதில் வழக்குக்குத் தேவையான முக்கிய தடயங்கள் கிடைக்கும் என்று நம்புகிறோம். கொள்ளைச் சம்பவத்துக்கு துப்பு கொடுத்தவர்கள் யார் என்பதைக் கண்டறிந்தபிறகு இந்த வழக்கின் விசாரணை சூடுபிடிக்கும்" என்றார். 

ரயில் கொள்ளையர்களை போலீஸ் காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், அவர்களிடமிருந்து எந்தத் தகவலையும் பெற முடியாததால் விசாரணை அதிகாரிகளில் சிலர் கடுப்பில் உள்ளனர். இதனால் மத்தியப் பிரதேச போலீஸார் சொல்லிக் கொடுத்த டெக்னிக்கைப் பயன்படுத்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் முடிவு செய்திருப்பதாக வழக்கின் விவரம் தெரிந்தவர்கள் கூறினர்.