வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (10/11/2018)

கடைசி தொடர்பு:14:00 (10/11/2018)

``தொடரும் போலி மருத்துவர்கள் கைது” - அச்சத்தில் அரியலூர் மக்கள்

அரியலூரில் போலி மருத்துவர்கள் கைது சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்கள் இன்றளவும் மருத்துவம் பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

போலி மருத்துவர்கள் பயன் படுத்திய சாதனங்கள்

அரியலூர் மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், பல்வேறு பகுதிகளில் மெடிக்கல் நடத்துபவர்கள், ஹோமியோபதி படித்தவர்கள் ஆங்கில மருத்துவத்தில் சிகிச்சை அளிப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்குப் புகார் வந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் விஜயலெட்சுமி உத்தரவின் பேரில் வருவாய்துறையினர், போலி மருத்துவர்மருத்துவத்துறையினர், காவல் துறையினர் இணைந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அதில் ராயம்புரம், குழுமூர், மீன்சுருட்டி, காட்டத்தூர், உட்கோட்டை, பிலாக்குறிச்சி உள்ளிட்ட 9 பகுதிகளில் மெடிக்கல் நடத்துபவர்கள் மற்றும் ஹோமியோபதி படித்தவர்கள் காய்ச்சல் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது இதையடுத்து உரிய அனுமதி பெறாமலும் உரிய தகுதி இன்றியும் மருத்துவம் பார்த்து வந்த சிறுகளத்தூரைச் சேர்ந்த பழனியாண்டி, மீன்சுருட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், சுப்பிரமணியன் உள்ளிட்ட ஒன்பது பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் 

பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் தானாக மெடிக்கலில் மருந்து மாத்திரைகள் வாங்கிப் பயன்படுத்தாமல் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வகையான ஆய்வுப் பணி தொடர்ந்து நடத்தப்படும். போலி மருத்துவர்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 

கடந்த ஆண்டு செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் பகுதிகளில் மருத்துவம் பார்த்த 7 போலி மருத்துவர்கள் பிடிபட்டார்கள். அவர்களில் சிலர் இன்றளவும் மருத்துவம் பார்த்து வருவதாகச் சமூக ஆர்வலர்கள் சிலர் சுகாதாரத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால், போலி மருத்துவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு கைது செய்யாமல் இருப்பதாகக் குற்றம்சாட்டுகிறார்கள் பொதுமக்கள்.