வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (10/11/2018)

கடைசி தொடர்பு:15:30 (10/11/2018)

``பன்றிக்காய்ச்சலுக்கு 17 பேர் பலி” - சுகாதாரத்துறை இயக்குநர் தகவல்

பன்றிக்காய்ச்சலுக்கு இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 17 பேர் பலியாகி இருப்பதாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்தார்,

சுகாதாரத்துறை இயக்குநர் ஆய்வு

நெல்லையில் புதிய பேருந்து நிலையத்தில் பொது சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர். குழந்தைசாமி ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சியில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. 

இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், ``பருவமழை தொடங்கியிருக்கும் சூழலில், மாவட்டம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு விழிப்பு உணர்வு சிறப்பு முகாம்கள், வாகனப் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலைய நடமாடும் மருத்துவக் குழுக்கள், குழந்தைகள் நலத்திட்ட குழுக்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

அதன் காரணமாக கடந்த ஆண்டுகளை விடவும் இந்த ஆண்டு டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் அனைத்து நகர மற்றும் ஊரகப் பகுதிகளிலும், துப்புரவுப் பணிகள், புகை மருந்து அடிக்கும் பணிகள், நிலவேம்பு கசாயம் வழங்குதல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்’’ எனக் கேட்டுக்கொண்டார்.

விழிப்புஉணர்வு பணி

பொது சுகாதாரத்துறை இயக்குநரான குழந்தைசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ``காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும். யாரும் தாங்களாக மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது. பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் வேலை செய்யும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். 

கைகளை சோப்பு போட்டு அடிக்கடி கழுவ வேண்டும். சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை உட்கொள்ளக் கூடாது. தமிழகம் முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 17 பேர் இறந்துள்ளனர். இதுவரை மாநிலம் முழுவதும் 1,100 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். தற்போது 260 பேர் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

பன்றிக் காய்ச்சலுக்காக இதுவரை 5 லட்சம் மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டன. தற்போது 7 லட்சம் மத்திரைகள் கையிருப்பில் இருப்பதால் அதை எதிர்கொள்ள சுகாதாரத்துறை தயார் நிலையில் இருக்கிறது’’’ எனத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின்போது நிலவேம்பு குடிநீர் தயாரிக்கும் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றைக் கொண்டு நிலவேம்பு கசாயம் தயாரிப்பது தொடர்பாக பொது மக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.