வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (10/11/2018)

கடைசி தொடர்பு:16:33 (10/11/2018)

`விதை கிலோ ரூ.3,000!’ - செங்காந்தள் மலர் சாகுபடியில் அசத்தும் அரவக்குறிச்சி விவசாயிகள்

நமது மாநில மலரான செங்காந்தள் மலர் சாகுபடியில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அதன் விதை கிலோ மூவாயிரம் வரை விலை போவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்கள் அவர்கள்.
இதழ்கள் விரிந்து ஒருவித கவர்ச்சியோடு காணப்படும் இந்த மலரைப் பற்றி சங்க இலக்கியங்களிலேயே பாடல்கள் உள்ளன. மருத்துவக் குணங்கள் நிறைந்ததாக கருதப்படும் இந்த மலர், பெரும்பாலான பகுதிகளில் இல்லாமல் அருகிப்போய்விட்டன. இந்த நிலையில், இதன் விதைகளுக்காக கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் பல விவசாயிகள் செங்காந்தள் மலர் சாகுபடியில் இறங்கி இருக்கிறார்கள். முண்டிதாங்கரை கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்ற விவசாயி தனது தோட்டத்தில் செங்காந்தள் மலர் சாகுபடி செய்திருக்கிறார். தோட்டத்தில் வேலையாக இருந்தவரைச் சந்தித்துப் பேசினோம்.


செங்காந்தள் மலர்``இந்த பகுதியில் பெருவாரியான விவசாயிகள் முருங்கை சாகுபடிதான் செய்கிறார்கள். தமிழகத்தில் மொத்த முருங்கை உற்பத்தியில் 60 சதவிகித முருங்கை உற்பத்தி அரவக்குறிச்சி ஒன்றியத்தில்தான் நடக்கிறது. ஏனென்றால், இந்தப் பகுதி முழுக்க மானாவாரி பகுதியாகும். கிணற்றுப் பாசனம், ஆழ்குழாய் கிணறு பாசனங்கள் மூலமே இங்கு வெள்ளாமை நடக்கிறது. எனக்கு அஞ்சு ஏக்கர் நிலமிருக்கு. நான் கடந்த ஐந்து வருடங்களாக மாற்று வெள்ளாமையா இந்த செங்காந்தள் மலர் சாகுபடியை செய்து வருகிறேன். மொத்தம் மூன்று ஏக்கர் நிலத்தில் இந்த மலரை வெள்ளாமை பண்ணி இருக்கேன். இரும்புக் கம்பிகள் ஊன்றி, கட்டைகளை மேலே அடுக்கி, நைலான் கயிறுகளால் கட்டி பந்தல் போல அமைத்து, இந்த மலர் கொடி படர்ந்து பரவ அமைப்பு ஏற்படுத்தனும். இந்த மலரின் விதையானது மருத்துவக் குணங்கள் நிறைஞ்சதா கருதப்படுது. இந்த மலரின் விதையைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்தை அளவாக பயன்படுத்தினால், பெண்களின் கர்ப்பப்பை பலமாகுமாம். அதிகமாக, பயன்படுத்தினால் கர்ப்பப்பையே சேதமாகுமாம். ஜெர்மனிக்கு அதிகம் செங்காந்தள் மலரின் விதைகள் ஏற்றுமதியாகுது. எங்ககிட்ட கிலோ மூவாயிரம்ன்னு வாங்கிட்டுப் போகும் இடைத்தரகர்கள், அதை வெளிநாட்டுக்கு பல மடங்கு விலை வச்சு விற்கிறாங்க. இந்த செங்காந்தள் மலரும் மருத்துவப் பயன்கள் கொண்டதுதான். மானாவாரி பூமியில் செங்காந்தாள் மலர் சாகுபடி எங்களை கரைசேர்க்குது" என்றார் மகிழ்ச்சியாக.