`எங்களைச் சந்திக்க முடியாமல் நழுவுகிறார் கரூர் கலெக்டர்!’ - மணல் குவாரி விவகாரத்தில் கொந்தளிக்கும் முகிலன் | Karur collector refused to meet us alleges Activist Mugilan

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (10/11/2018)

கடைசி தொடர்பு:17:00 (10/11/2018)

`எங்களைச் சந்திக்க முடியாமல் நழுவுகிறார் கரூர் கலெக்டர்!’ - மணல் குவாரி விவகாரத்தில் கொந்தளிக்கும் முகிலன்

முறைகேடாக அனுமதி வழங்கப்பட்ட அரசு மணல் குவாரி மற்றும் மணல் கிடங்கை மூட வலியுறுத்தி, ஆதாரங்களோடு மனு கொடுக்கப் போனபோது கலெக்டர் 'ஆய்வு' என்று நழுவிவிட்டதாக முகிலன் அதிரடி குற்றம்சாட்டுகிறார்.

முகிலன்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மணத்தட்டையில் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரியை இயக்கி வருகிறது. அதோடு அருகில் உள்ள ராஜேந்திரம் என்னும் இடத்தில் அரசு மணல் கிடங்கையும் அமைத்து, காவிரியில் அள்ளப்படும் மணலை அந்த மணல் கிடங்கில் கொட்டி, அங்கிருந்து விற்பனை செய்து வருகிறார்கள். இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், ``மணத்தட்டை அரசு மணல் குவாரிக்கு 430 மீட்டர் தூரத்தில் மணப்பாறை கூட்டுக்குடிநீர் திட்டம் இயக்கப்படுது. அதனால், `இந்த இடத்தில் மணல் குவாரி அமைக்கக் கூடாது' என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அதையும் மீறி அனுமதி வாங்குவதற்காகக் கொடுக்கப்பட்ட வரைபடத்தில் இந்தக் கூட்டுக் குடிநீர் திட்டத்தை மறைத்து வாங்கியுள்ளார்கள். அதேபோல், ராஜேந்திரம் மணல் கிடங்கையும் அனுமதி வாங்காமல் நடத்துகிறார்கள்" என்று குற்றம்சாட்டி வருகிறார்.

அதற்கு எதிராக தொடர் போராட்டங்களையும் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினரோடு சேர்ந்து முன்னெடுத்து வருகிறார். இதுபற்றிய ஆதாரங்களை ஏற்கெனவே மூன்று முறை கரூர் கலெக்டர் அன்பழகனைப் பார்த்துக் கொடுத்தார் முகிலன். நடவடிக்கை இல்லை. இந்த நிலையில், இன்று காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினரோடு கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகனைப் பார்த்து தகுந்த ஆதாரங்களோடு மனு கொடுக்கப் போனார். 

அதன்பிறகு நடந்தவை குறித்து நம்மிடம் பேசிய முகிலன், ``மணத்தட்டை மணல் குவாரியும், ராஜேந்திரம் மணல் கிடங்கும் முறைகேடாக உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி அனுமதி கொடுத்து நடத்தப்படுகிறது. இதற்குக் காரணம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெயராமன், உதவி செயற்பொறியாளர் திலகம், குளித்தலை கோட்டாட்சியர் ஏ.டி மைன்ஸ் எல்லோரும்தான். `அவர்கள் மீது குண்டாஸ் சட்டத்தைப் பாய்ச்சி, அந்த மணல் குவாரியை இழுத்து மூடணும்'ங்கிற கோரிக்கைகள் அடங்கிய மனுவைதான் இன்று மதியம் 12 மணிக்கு கரூர் கலெக்டர் அன்பழகனைப் பார்த்துக் கொடுத்து வரப் போனோம். பத்து மணிக்கு கலெக்டர் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துக்குறதா சொன்னாங்க. அதனால் பன்னிரண்டு மணிக்கு அவரைச் சந்திக்கப் போனோம்.

ஆனால், நாங்க அவருக்காக காத்திருப்பதைத் தெரிந்துகொண்ட அவர், திடீர்னு அரவக்குறிச்சி பகுதியில் ஆய்வு நிகழ்ச்சியில் கலந்துக்கப் போறேன்னு கலெக்டர் அலுவலகத்துக்கு வராமலேயே கிளம்பிட்டார். எங்களைத் தவிர்ப்பதற்காகவே அந்த ஆய்வு நிகழ்ச்சியை அவர் உருவாக்கச் சொல்லி இருக்கிறார். மாவட்ட கலெக்டர் மாவட்ட நிர்வாக நீதிபதியாக கருதப்படுகிறார். கரூரில் முறைகேடாக நடக்கும் மணல் குவாரியை சட்டப்படி இழுத்து மூட வலியுறுத்தி அவரை சந்தித்து ஆதாரங்களோடு மனு தர தொடர்ச்சியாக முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கோம். ஆனா, அவர் யாரோ சிலர் தரும் அழுத்தத்துக்குப் பயந்து எங்களைச் சந்திக்காமல் தவிர்த்து வருகிறார். மாவட்ட கலெக்டர் தவற்றைத் தண்டிக்கப் பயந்தால், வேற யாரை நாங்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது. கலெக்டரின் இந்த 'ஓடி ஒளியும் போக்கு' தொடர்ந்தால், எங்கள் போராட்டம் அவருக்கு எதிரானதாகவும் மாறும்" என்றார் ஆவேசமாக.