வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (10/11/2018)

கடைசி தொடர்பு:19:39 (10/11/2018)

கொசுவை ஒழிக்க பள்ளப்பட்டி மக்களின் புது உத்தி!

டெங்கு கொசுவை ஒழிக்க பள்ளப்பட்டி மக்கள் எடுத்துள்ள புதிய முயற்சி பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது,  

இன்று தமிழ்நாடு முழுக்க பலரது உயிரையும் காவு வாங்கி கொண்டிருக்கிறது டெங்குவும், பன்றிக் காய்ச்சலும். டெங்குவை பரப்பு ஏடிஎஸ் கொசுக்கள் தூய தண்ணீரில் வளரும் தன்மை கொண்டது. பன்றிக் காய்ச்சலும் பரவலாக பரவி தமிழக மக்களை கிலியூட்டிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், டெங்கு கொசு மற்றும் சாக்கடையில் வளரும் கொசுக்களை அழிக்க புதிய முயற்சியை எடுத்துள்ளனர் பள்ளப்பட்டி மக்கள்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் இருக்கிறது பள்ளப்பட்டி. 50,000 பேர் வசிக்கும் பள்ளப்பட்டி பேரூராட்சியாகும். அதோடு தமிழக அளவில் உள்ள பெரிய பேரூராட்சிகளில் இதுவும் ஒன்று. நெருக்கமான வீடுகள், முறைபடுத்தபடாத சாக்கடைக் கழிவுநீர் வாய்க்கால்கள் என்று இங்கு கொசு பரப்ப ஏராளமான காரணிகள் உள்ளன. அதோடு, பள்ளப்பட்டி பேரூராட்சியை ஒட்டி ஓடும் நங்காஞ்சி ஆறு சாக்கடை மட்டுமே ஓடும் ஆறாக மாற்றப்பட்டதால், பள்ளப்பட்டியில் கொசு உற்பத்தியும் முதல் இடத்தில் வரும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. கொசுக்களை ஒழிக்கவோ, நங்காஞ்சி ஆற்றைச் சுத்தப்படுத்தவோ பேரூராட்சி நிர்வாகம் தயாராக இல்லை. இதனால், மக்களே 'நமக்கு நாமே' என்றபடி கொசுக்களைக் கட்டுப்படுத்தும் புதிய முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். அதாவது, 'பள்ளப்பட்டி வாட்ஸ்அப் குழு' என்று ஒரு அமைப்பைத் தொடங்கி செயல்படுத்தி வருகிறார்கள். அதன்மூலமாக, பல முன்மாதிரியான காரியங்களை செய்து வருகிறார்கள்.

 நம்மிடம் பேசிய அந்தக் குழுவைச் சேர்ந்த சிலர், ``பள்ளப்பட்டி பேரூராட்சியில் கொசுக்கள் வளர பல விஷயங்கள் காரணமா இருக்கு. குப்பைக்கிடங்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கு நடுவிலேயே உள்ளது. அந்தக் குப்பை குடிநீரில் கலந்து வரும் கொடுமையும் நடக்குது. பலருக்கும் மர்மக் காய்ச்சல் வந்ததால், எங்களுக்கு பயமா போயிட்டு. அதனால், கொசுக்களைக் கட்டுப்படுத்த புதிய உத்தியைக் கையாளத் தொடங்கி இருக்கிறோம். கோதுமை தவிடு அல்லது மரத்தூளைத் துணியில் பந்தாக முடிந்துக்கொண்டு, அதை இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் எடுக்கப்படும் வேஸ்ட் ஆயிலில் அந்தப் பந்தை முக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தப் பந்துகளை கொசுக்கள் உற்பத்தியாகும் என்று நினைக்கும் இடங்களில் போட்டுவிட வேண்டும். அப்போது கொசுக்களின் உற்பத்தி கட்டுப்படுத்தப்படும். அதாவது, உருளைகள் வேஸ்ட் ஆயிலுடன் மிதப்பதால், கொசுக்கள் சாக்கடை நீரில் உட்காராது. முட்டையிடாது. அதேபோல், ஏற்கெனவே சாக்கடையிலுள்ள கிருமிகள் காற்றில்லாத காரணத்தினால், செத்துவிடுகிறது. இப்படிதான் நாங்களே பள்ளப்பட்டி பேரூராட்சியில் பள்ளப்பட்டி வாட்ஸ்அப் குழு மூலம் இந்த முயற்சியை செய்துட்டு வர்றோம். செயல்படாத பேரூராட்சி நிர்வாகம் கொசுக்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்ன்னு நம்பிக்கிட்டு இல்லாமல் நாங்களே எங்களைக் காப்பாத்திக்க இப்படி செய்ய ஆரம்பித்திருக்கிறோம்" என்றார்கள்.