`ஸ்டாலினின் பகல்கனவு பலிக்காது’ - செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் வேலுமணி தாக்கு! | Stalin's daydreaming will not come true- Minister Velumani!

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (10/11/2018)

கடைசி தொடர்பு:18:00 (10/11/2018)

`ஸ்டாலினின் பகல்கனவு பலிக்காது’ - செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் வேலுமணி தாக்கு!

``அ.தி.மு.க.-வின் இந்த ஆட்சி எப்போது கவிழும் என ஸ்டாலின் பகல் கனவு கண்டு கொண்டு இருக்கிறார். அவரது பகல் கனவு பலிக்காது. இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் சரி, நாங்கள் இப்போதே தயாராகிவிட்டோம்” என உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

அமைச்சட் வேலுமணி

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களின் பதவி நீதிமன்ற உத்தரவினால் பறிபோனதால், காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 18 தொகுதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் தொகுதி, விளாத்திகுளம் தொகுதி என இரண்டு தொகுதிகள் உள்ளன. இதில், ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டையில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் மற்றும் இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தூத்துக்குடி தொகுதி எம்.பி., ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, அமைச்சர்கள் வேலுமணி, கடம்பூர் ராஜூ, ராஜலெட்சுமி, ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ., சண்முகநாதன் மற்றும் கோவை மாவட்ட தொகுதிகளின் எம்.எல்.ஏ-க்கள்., ஆறுகுட்டி, அருண்குமார், சின்ராஜ், கஸ்தூரி வாசு, சூலூர் கனகராஜ், எட்டிமடை சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

செயல்வீரர்கள் கூட்டம்

இதில் முதலில் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், ``வீரபாண்டிய கட்டபொம்மன் ஆட்சி செய்ததும் இந்த மாவட்டத்தில்தான். கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்ப மன்னன் ஆட்சி செய்ததும் இங்குதான். அ.தி.மு.க.வால் ஓட்டப்பிடாரம், விளாத்திகுளத்தில் புதுமுகமாக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்ற இருவரும் எட்டப்பனைப் போல தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால், தற்போது பதவியை இழந்து நிற்கிறார்கள். தினகரன், ஸ்டாலினுடன் இணைந்து கூட்டு சேர்ந்து செயல்பட்டதால்தான் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலில் பணியாற்றும்போது கட்டபொம்மனைப் போல செயல்பட வேண்டும். சுயநலத்தால் எட்டப்பர்களாக மாறி செயல்படக்கூடாது” என்றார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, ``ஓட்டப்பிடாரம் தொகுதியில் இதுவரை 7 முறையும், விளாத்திகுளம் தொகுதியில் இதுவரை 8 முறையும் அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. இந்தமுறையும் வெற்றி பெறும். இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும், சட்டமன்றத் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் இணைந்து வர வாய்ப்பு உள்ளதாக ஸ்டாலின், திருநாவுக்கரசர் போன்றோர் கூறி வருகிறார்கள். ஒரு அனுமானத்தின் அடிப்படையில் அவர்கள் அவ்வாறு கூறி வருகிறார்கள். எங்களுக்குத் தேர்தல் பயம் ஏதுமில்லை. தேர்தல் எப்போது வந்தாலும் சரி, அதை எதிர்கொள்ள, வெற்றி பெற,  நாங்கள் தற்போதே களத்தில் இறங்கித் தயாராகி விட்டோம்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலினைப் பொறுத்தவரையில் இந்த ஆட்சி பத்து  நாள்களில் முடிந்துவிடும், ஒரு மாதத்தில் முடிந்துவிடும், ஆறு மாதத்தில் முடிந்துவிடும் என ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறார். இந்த ஆட்சி எப்போது கவிழும் எனப் பகல் கனவு காண்கிறார் அவர். அவரது கனவு ஒருபோதும் பலிக்காது. அது கனவாகவே மட்டுமே இருக்கும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க