வெளியிடப்பட்ட நேரம்: 16:33 (10/11/2018)

கடைசி தொடர்பு:16:33 (10/11/2018)

`விடுமுறையில் வீட்டுக்கு வந்த ப்ளஸ் டூ மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!’ - தருமபுரி பரபரப்பு

தீபாவளி விமுறைக்காக வீட்டுக்கு வந்த ப்ளஸ் டூ மாணவியை இரண்டுபேர் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் அந்த மாணவி இறந்தது தருமபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்துள்ள சிட்லிங் மலை கிராமத்தைச் சேர்ந்த மாணவி, பாப்பிரெட்டிபட்டி விடுதியில் தங்கி ப்ளஸ் டூ படித்து வந்தார். கடந்த 2-ம் தேதி முதல் தீபாவளிப் பண்டிகை விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு அந்த மாணவி வந்திருக்கிறார். கடந்த 5-ம் தேதி மாணவியின் பெற்றோர் ஆடுகளை மேய்க்கக் காட்டுக்குச் சென்றநிலையில், அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அந்தச் சமயத்தில் அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ், சதீஸ் இருவரும் மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதில், படுகாயம் அடைந்த மாணவி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். 

இந்தச் சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். ஆனால், காவல் நிலையத்தில் அலட்சியமாகத் தட்டிக் கழிக்கவே, அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக புகார் எண்ணான 1077-க்கு அழைத்து புகாரைப் பதிவு செய்திருக்கிறார்கள். அதன்பிறகே கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். தொடர் விசாரணை மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு மாணவியை அழைத்துச் சென்றபோது உடல் அளவில் அவர் மிகவும் பலவீனமாக இருந்துள்ளார். மருத்துவப் பரிசோதனை முடியும் வரை பெண்கள் விடுதியில் தங்கி இருக்கட்டும் என்று அரசு தரப்பில் பரிந்துரை செய்து அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் அவரது உடல்நிலை பாதிக்கப்படவே, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், அந்த மாணவி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரமேஷ், சதீஸ் ஆகியோரை போலீஸார் தேடி வருகிறார்கள். இந்தச் சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.