வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (10/11/2018)

கடைசி தொடர்பு:21:00 (10/11/2018)

வயல்வெளியில் தஞ்சமடைந்த மலைப்பாம்பு! - பத்திரமாக மீட்ட இளைஞர்கள்

புதுக்கோட்டை அருகே வயல்வெளியில் தஞ்சமடைந்த மலைப்பாம்பினை, அந்த பகுதி இளைஞர்கள்  பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே  ஆலவயல்  தெக்கிக்காடு கிராமத்தில்  வயல் வெளிப்பகுதியில் 12அடி நீளமுள்ள மலைப்பாம்பு  மயங்கிய நிலையில் கிடந்தது. அருகிலேயே கோழி ஒன்று இறந்த நிலையில் கிடந்ததது. இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். வனத்துறை அதிகாரிகள் யாரும் வராததால், 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் களத்தில் இறங்கினர். மலைப்பாம்பினை லாவகமாகப் பிடித்து அருகே உள்ள வனப்பகுதிக்குள் விட்டனர்.

இதுகுறித்து அந்த பகுதி இளைஞர்களிடம் பேசினோம். ``வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து நீண்ட நேரமாகியும் யாரும் வரவில்லை. அவர்கள் யாரும் வராததால்தான் நாங்களே களத்தில் இறங்கி பாம்பைப் பிடித்தோம். மலைப்பாம்பு இரண்டு கோழிகளை விழுங்கியுள்ளது. ஒன்றை வெளியே கக்கிவிட்டது. ஒரு கோழியை வெளியே கக்க முடியாததால், மயங்கிய நிலையில் இருந்தது. இதனால், அந்தப் பாம்பை எந்தவித காயமும் இல்லாமல் பிடித்து வனப்பகுதிக்குள்  விட்டோம்’’ என்றனர்.