`ஓய்வுபெற இருக்கும் பொன்.மாணிக்கவேலின் பணி காலத்தை நீட்டிக்க வேண்டும்!’ - வழக்கறிஞர் கோரிக்கை | TN government should extend IG Pon.Manickavel's service period urges lawyer

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (10/11/2018)

கடைசி தொடர்பு:17:30 (10/11/2018)

`ஓய்வுபெற இருக்கும் பொன்.மாணிக்கவேலின் பணி காலத்தை நீட்டிக்க வேண்டும்!’ - வழக்கறிஞர் கோரிக்கை

சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் இந்த மாத இறுதியில் ஓய்வுபெற உள்ளதாகவும், அவருக்குப் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

யானை ராஜேந்திரன்

தமிழக கோயில்களில் உள்ள சிலைகள் மாயமானது தொடர்பாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த பொதுநலவழக்கில்தான், சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பல்வேறு தடைகள், எதிர்ப்புகளையும் மீறி, நேர்மையாக விசாரணை நடத்தி வரும் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு கடந்த சில வருடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகளைக் கண்டுபிடித்துள்ளது. ஐஜி பொன் மாணிக்கவேலின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாத தமிழக அரசு, பொன்.மாணிக்கவேல் தன்னிச்சையாகச் செயல்படுவதாகவும், ஒத்துழைக்க மறுப்பதாகவும் கூறி, சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரி வழக்கு தொடர்ந்தது. சிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ விசாரிக்க வாய்ப்பில்லை என மத்திய அரசு பதிலளித்ததால் தமிழக அரசு அமைதியானது.

தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் மாயமான சிலைகளைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இந்த மாத இறுதியில் பணிவு ஓய்வுபெற இருப்பதாகவும் அவருக்குப்  பணி நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இன்று திருச்சி வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``சிலைக் கடத்தல் தொடர்பாக நான் வழக்கு தொடர்ந்த பிறகு சிலைக் கடத்தல் பிரிவு அதிகாரிகள் ஏராளமான சிலைகளைக் கண்டுபிடித்து விட்டார்கள். சில கடைக்காரர்கள் பழைமையான சிலைகளுக்குப் பில் வைத்திருப்பதாகத் தெரிகிறது. அவர்களுக்கு எந்த அடிப்படையில் சிலைகள் கிடைத்தது என்பது குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். விரைவில் பெங்களூரு ஜி.பி.சாலையில் உள்ள பிரபல கடையில் இருக்கும் பெரிய பெரிய சிலைகள் மீட்கப்பட உள்ளன.  சிலைக் கடத்தல் விவகாரங்களில் இந்து அறநிலைத்துறை மிகப்பெரிய தவறுகள் செய்துள்ளது. தமிழகக் கோயில்களில் இருந்த நகைகள் சிலைகள் ஆபரணங்கள் எடைகள் குறித்து தனி ஆவணங்கள் பராமரிக்க வேண்டும் என இந்து அறநிலைத்துறை சட்டம் கூறுகிறது. ஆனால், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அந்தக் கணக்குகளைப் பராமரிக்காமல் விட்டு விட்டார்கள்.

நகைகள் எவ்வளவு எடை, நகைகள் சிலைகள் எவ்வளவு எடை இருந்தது என்பது குறித்த கணக்குகளைப் பராமரித்து இருந்தால், திருடப்பட்ட சிலைகள் மற்றும் நகைகளுக்குப் பதிலாக மாற்று சிலைகள் வைத்திருப்பது சுலபமாக அம்பலமாகியிருக்கும். ஒரு சிலையை எடுத்து விட்டு வேறு சிலை வைத்து விடலாம். ஆனால், முன்பிருந்த அதே அளவு மற்றும் எடையில் சிலைகளை செய்வது அவ்வளவு சுலபம் இல்லை. அதேபோல் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் குறித்த கணக்கு வழக்குகளையும் முறையாகப் பராமரிக்கவில்லை. கோயில் சிலைகள் மற்றும் நகைகளை வெறும் பொருளாகப் பார்க்கக் கூடாது; அவை பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள். திருச்சி மாவட்டம் அல்லூர், ஆண்டவ நல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கோயில்களில் நிலங்கள் மற்றும் சிலைகள் குறித்த விஷயங்களில் இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் மிகவும் அலட்சியமாகச் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து விரைவில் நீதிமன்றத்தை நாட இருக்கிறோம்.

இதுவரை  தமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பான விவகாரங்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த அரசியல்வாதிகளுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. ஆனால், இந்தக் கடத்தல் சம்பவங்களில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு அதிகமான தொடர்பு உள்ளது. இந்து அறநிலையத்துறை அதிகாரியாக இருந்த ஒரு உயர் அதிகாரிக்கு, 400 கோடி ரூபாய் சொத்து மதிப்பு உள்ளது  அதுமட்டுமல்லாமல் அவர், தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகள் நடத்தி வருகிறார். இவ்வளவு பணம் அவருக்கு எங்கிருந்து வந்தது. இவை அனைத்தும் சிலைக் கடத்தல் மூலமாகச் சேர்க்கப்பட்டதுதான். இப்படிப்பட்ட அதிகாரிகள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்கிற பயத்தில் அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சியினரிடம், சிலைக் கடத்தல் வழக்குகளில் நாங்கள் அரசியல்வாதிகளுக்கு எதிராகத் செயல்படுவதாக அவர்களை எங்களுக்கு எதிராகத் திசை திருப்பி விடுகிறார்கள்.

இந்து அறநிலையத்துறையில் சில நல்ல அதிகாரிகளும் உள்ளார்கள். `ஐ.ஜி/பொன்மாணிக்கவேல்சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேலைத் தவிர மற்ற அதிகாரிகள் மிகவும் நேர்மையாகவும் சரியாகவும் செயல்பட வாய்ப்பில்லை’ என்று சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு வழக்குகளை சி.பி.ஐ விசாரிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த சத்தியப் பிரமாண வாக்குமூலத்தில் கூறி இருக்கிறது. அதைத்தான் நாங்களும் சொல்கிறோம். சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கில் ஐஜி பொன்.மாணிக்கவேல் காட்டிய அக்கறையும், ஆர்வமும் போன்று வேறு எந்த அதிகாரியும் செயல்பட முடியாது. ஆகவே, இம்மாத இறுதியில் ஓய்வுபெற இருக்கும் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்குப் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும். 

சிலைக் கடத்தல், கோயில் சொத்து மீட்டல் உள்ளிட்டவை பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் இயக்கங்களில் கொள்கைகளுக்கு ஒத்துப்போவதால் இந்த விவகாரங்களின் பின்னணியில் பி.ஜே.பி உள்ளிட்ட அமைப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அவற்றில் உண்மை இல்லை.

நீலகிரி மலையில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்கள் மற்றும் ஹோட்டல்கள் குறித்த வழக்கில், மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யானைகள் வழித்தடத்தில் அனுமதியின்றி ஹோட்டல்கள் கட்டியதாக்கதான் வழக்கு, இந்த நிலையில் சுற்றுலாத்துறை விழா எடுக்கிறோம் என்கிற பெயரில் சுற்றுலாப் பயணிகளை இரவு நேரங்களில் வனப்பகுதிகளுக்குச் அழைத்துச்சென்று காட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். தனியார் ஹோட்டல் நிர்வாகம் செய்ததையே அரசு செய்கிறது. அப்படிச் செய்வது தவறு’’ என்றார்.

``ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பணி ஓய்வு பெறப்போகிறார். தற்போதைய சூழலில் அவருக்குப் பணி நீட்டிப்பு தமிழக அரசு செய்யாது. ஆனால், சிலைக் கடத்தல் விவகாரத்தில் முழுமையான விசாரணை நடைபெற பொன்.மாணிக்கவேல் பணி காலத்தை நீட்டிக்க வேண்டும்’’ என யானை ராஜேந்திரன் கோரிக்கை வைத்து வருவது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க