வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (10/11/2018)

கடைசி தொடர்பு:19:00 (10/11/2018)

`கடலூர் அருகே எஸ்.பி கண்ணெதிரே லஞ்சம் வாங்கிய போலீஸார்!’ - ஆயுதப்படைக்கு மாற்றி நடவடிக்கை

கடலூர் எஸ்.பி சரவணன் கண்ணெதிரே போலீஸார் இருவர் லஞ்சம் வாங்கிய சம்பவம் நடந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த எஸ்.பி. அந்தக் காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறார்.

எஸ்.பி.சரவணன்

கடலூர் மாவட்ட எஸ்.பி.சரவணன் இன்று சொந்த ஊருக்கு காரில் திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொண்டங்குறிச்சி என்ற இடத்தில் சென்றபோது முன்னால் ஆடுகள் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த மினி லாரி திடீரென நின்றுள்ளது. அங்கு நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணியில் இருந்த காவலர்கள் மினி லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கியுள்ளனர்.

இதைப்பார்த்த எஸ்.பி. சரவணன் அதிர்ச்சியடைந்துள்ளார். எஸ்.பி. சரவணன் சீருடையில் இல்லாமல் இருந்ததால் காவலர்களுக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. இதையடுத்து உடனடியாக நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணியில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், காவலர் நந்தகுமார் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. சரவணன் உத்தரவிட்டார். மேலும், அவர்கள் மீது துறைரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் 4 நாள்களுக்கு முன்பு விருத்தாசலத்தில் தீபாவளியின் போது பட்டாசு பார்சல் இனாம் வாங்கிய 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.