வெளியிடப்பட்ட நேரம்: 18:36 (10/11/2018)

கடைசி தொடர்பு:12:38 (12/11/2018)

`மரங்கள் வெட்டுவதை வேடிக்கை பார்த்த அரசு, மரக்கன்றுகள் நடுவதைத் தடுக்கிறது!’ - கொதிக்கும் விவசாயிகள்

சாலையில் அமர்ந்து தர்ணா

``சேலம் டூ சென்னை 8 வழிச் சாலைக்கு அளவீடு செய்யப்பட்ட மஞ்சவாடி கனவாய் பகுதியில் உள்ள 121 மரங்களை அரசு உதவியோடு சிலர் வெட்டினார்கள். அதையடுத்து உயர்நீதிமன்ற விசாரணையின் போது 8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்டவர்கள் மரங்கள் வெட்டிய சம்பவத்தை தெரிவித்தார்கள். அதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததோடு, பதிலுக்கு 1210 மரங்கள் நட உத்தரவிட்டது. அரசு தரப்பில் ஒரு மரக்கன்றுக் கூட நடவில்லை. பதிலுக்கு நாங்கள் நடுகிறோம்’’ என 8 வழிச்சாலையால் பாதிக்கப்பட்ட மக்கள் மரக்கன்றுகள் நடுவதாக அறிவித்தார்கள்.

சிவகாமிஅதையடுத்து சேலம் அயோத்தியாப்பட்டிணம் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தார்கள். 8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட ராமலிங்கபுரம், மின்னாம்பள்ளி, அயோத்தியாப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த மக்கள், ஏரிகாடு புதூர் பகுதியில் மரக்கன்றுகள் நட  நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் புறப்பட்டு வந்தார்கள். ஏரிக்காடு பிரிவு ரோட்டிலேயே அவர்களைக் காவல்துறையினர் கயிறு போட்டு தடுத்து நிறுத்தினார்கள். அதையடுத்து விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதோடு விவசாயிகள் ரோட்டில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

இதுகுறித்து விவசாயி சிவகாமி கூறுகையில்,''அரசு புறம்போக்கு நிலத்தில் மரக்கன்றுகளை நடப்போகிறோம் என்று கூறியதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு தடுத்து நிறுத்துகிறார்கள். ஆனால், மஞ்சவாடி கனவாய் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டினார்கள். நாங்கள் காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை என பலத் துறைக்கு போன் பண்ணி சொல்லியும் யாரும் வரவில்லை. தற்போது மரம் நடுவதை தடுப்பதற்கு வந்திருக்கிறார்கள். அப்படியானால் இந்த அரசாங்கம் மரங்கள் வளர்க்க கூடாது; மரங்களை வெட்ட வேண்டும் என்று சொல்லுகிறதா என்று தெரியவில்லை.

நாங்கள் என்ன தீவிரவாத செயல்களிலா ஈடுபடுகிறோம். உயர்நீதிமன்றம் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக மரக்கன்றுகள் வைக்க வேண்டும் என்று அரசுக்கு தெரிவித்தது. ஆனால்2 மாதங்கள் ஆகியும் ஒரு மரக்கன்று கூட நடவில்லை. அரசு செய்ய தவறியதை நாங்கள் செய்கிறோம். 8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை இந்த அரசாங்கமும், காவல்துறையும் மனிதர்களாகவே மதிப்பதில்லை. எங்களுக்காக உயிர் நீர்த்த மரங்களுக்கு நன்றி கூறவே மரக்கன்றுகள் நடுகிறோம். அதைக் கூட தடுக்கிறார்கள் என்றால் இது என்ன ஜனநாயக நாடா?'' என்று குமுறினார்.