வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (10/11/2018)

கடைசி தொடர்பு:21:30 (10/11/2018)

மனைவி இறந்த சோகத்தில் கணவனும் தற்கொலை! - குழந்தைகள் பரிதவிப்பு

மனைவி தற்கொலை செய்துகொண்டு இறந்ததால், விரக்தியில் இருந்து வந்த கணவனும் தற்கொலை செய்துகொண்டதால், குழந்தைகள் பரிதவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் ஆலங்குடியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை

புதுக்கோட்டை மாவட்ட ஆலங்குடி அருகே உள்ள குப்பக்குடியைச் சேர்ந்தவர்  குணபாலன் (43). இவரின் மனைவி ஜெயபாரதி. குணபாலனுக்கும் ஜெயபாரதிக்கும் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். ஜெயபாரதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டது. மனைவியை நோயில் இருந்து விடுவிக்க குணபாலன் ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி, இறங்கித் தொடர் சிகிச்சை அளித்து வந்துள்ளார். ஆனாலும், நோய் குணமடையவில்லை. கடந்த ஆகஸ்ட். 5-ம் தேதி ஜெயபாரதி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவி இறந்த நாளில் இருந்து குணபாலனும் தனிமையில் மன விரக்தியுடன் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், குணபாலனும் கடந்த சில தினங்களுக்கு முன்பு எலி மருந்து சாப்பிட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  குணபாலன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். தாயைத் தொடர்ந்து, தந்தையும் தற்கொலை செய்துகொண்டதால், குழந்தைகள் பரிதவித்து நிற்கின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.