`பிக்பாஸ்போல் அரசியலையும் மீசையை முறுக்கி நடத்தப் பார்க்கிறார் கமல்!’ - ராஜேந்திர பாலாஜி | Minister Rajendra Balaji slams Kamalhassan

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (10/11/2018)

கடைசி தொடர்பு:20:00 (10/11/2018)

`பிக்பாஸ்போல் அரசியலையும் மீசையை முறுக்கி நடத்தப் பார்க்கிறார் கமல்!’ - ராஜேந்திர பாலாஜி

''மத்திய அரசில் பெரிய அளவில் குற்றங்கள், குறைகள் இல்லை. மக்கள் பணியில்  அக்கறையோடு செயல்படுகின்றனர். ஆன்மிக ஆட்சியைத்தான் நடத்தி வருகிறார்கள். எதிர்க்கட்சிகள்தான் குறை சொல்கிறார்கள்'' என்று பி.ஜே.பி அரசை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகழ்ந்து பேசியது அ.தி.மு.கவினரையே மீண்டும் அதிர வைத்துள்ளது. 

ராஜேந்திர பாலாஜி


''எங்கள் ஆட்சிக்கு எது வந்தாலும் மேல உள்ளவன் பார்த்துக் கொள்வான்'' என்று மோடியை குறிப்பிட்டு ஏற்கெனவே பேசியதையே மக்கள் மறக்காத நிலையில் இன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி,''நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் கூட்டணிக்கு முயற்சி செய்வர். ஸ்டாலின், சந்திரபாபுநாயுடு சந்திப்பு அது போன்றதுதான். இது அதிசயம் கிடையாது. அ.தி.மு.க சார்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வியூகங்களை முதல்வர் அமைத்து  வருகிறார். விரைவில் மற்ற கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசி பலமான கூட்டணி அமைத்து  அ.தி.மு.க வெற்றிபெறுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பார். நாட்டில் உள்ள அத்தனை வாக்காளர்களும் பிரதமர் ஆகும் தகுதி உள்ளவர்கள். பா.ஜ.கவின் அலையை வைத்துதான் சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆனார். அவர்  கோரிக்கை நிறைவேறவில்லை என்பதால் வெளியேறியுள்ளார். 

மனிதாபிமானம் மிக்க எளிமையான  சாதாரண விவசாயியான  எடப்பாடி பழனிசாமி ஆள்வது சிலருக்குப் பிடிக்கவில்லை. 2 வருடம் அல்ல, 2,000 ஆண்டுகள் ஆனாலும் இந்த ஆட்சி தொடரும். கமல் தேர்தலில் நின்று ஒரு சீட்டு ஜெயித்துவிட்டு பேசட்டும். பிக்பாஸ்போல் அரசியல் களத்திலும் மீசையை முறுக்கி நடத்தப் பார்க்கிறார். அது எடுபடாது. மது விற்பனையை நிறுத்தினால் பக்கத்து மாநிலங்களுக்கு சென்று குடித்து உடம்பைக் கெடுத்து உயிரிழப்பார்கள். இலக்கு வைத்து மது விற்பனை செய்யப்படவில்லை’’ என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க