வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (10/11/2018)

கடைசி தொடர்பு:22:00 (10/11/2018)

`ஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு கண்துடைப்பு நாடகம்!’ - தம்பிதுரை விமர்சனம்

`ஸ்டாலின்-சந்திரபாபு நாயுடு இடையேயான சந்திப்பு கண் துடைப்பு நாடகம். இது அரசியலில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது’ என்று புதுக்கோட்டை வந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, விராலிமலை பகுதியில் சத்யநாதபுரம், புங்குனிபட்டி, குரும்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில்,சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் சேர்ந்து பொதுமக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றனர். பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் உறுதி அளித்தார். 

பின்னர் சத்யநாதபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தம்பிதுரை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,``இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை மத்திய அரசு கண்காணித்து வருகிறது. நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிசேனாவின் செயல் கண்டிக்கத்தக்கது. இலங்கையில் தமிழர்கள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் ஆகும். 

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு - தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் இடையே நடைபெற்ற சந்திப்பு கண் துடைப்பு நாடகம். இது, அரசியலில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தமிழகத்தில் அரசு அரசு செயல்படுகிறதா என்று கேள்வி கேட்கும் சந்திரபாபு நாயுடு, ஆந்திராவில் அந்த அரசு சரியாக இயங்குகிறதா என்பதை முதலில் யோசித்துப் பார்க்க வேண்டும். தமிழகத்தில் 234 தொகுதிகள் இருக்கும்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி தினகரன்  ஆதரவு எம்எல்ஏக்கள் 18 தொகுதிகளில் மட்டும் உண்ணாவிரதம் இருப்பது ஏன்?. மற்ற தொகுதிகள் எல்லாம் வளர்ச்சி பெற்றுள்ளன என்பதை அவர்கள்  ஏற்றுக்கொண்டுள்ளனர். 18 தொகுதிகளில் போராட்டம் நடத்தும் அளவிற்குத்தான் அ.ம.மு.க கட்சிக்குப் பலமுள்ளது’’ என்றார்.