வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (10/11/2018)

கடைசி தொடர்பு:22:30 (10/11/2018)

`இலவசப் பொருள்கள் கொடுப்பதை அரசியலுக்காகவே விமர்சிக்கிறார்கள்!’ - வைத்திலிங்கம் எம்.பி

`அரசு இலவசப் பொருள்கள் கொடுப்பதை அரசியலுக்காகவே விமர்ச்சிக்கிறார்கள்’ என தஞ்சாவூரில் அ.தி.மு.க எம்.பியும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் தெரிவித்தார்.

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் எம்.பி வைத்திலிங்கம், வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு, கலெக்டர் அண்ணாத்துரை மற்றும் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் மற்றும் வேளாண்மைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு பயன்படும் பொருள்கள் ஆகியவை பயனாளிகளுக்குக் கொடுக்கப்பட்டது. மேலும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெற்ற கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள், துாய்மையைப் பராமரித்த பள்ளிகளுக்கு துாய்மை பள்ளி விருதுகளும் கொடுக்கப்பட்டன.மொத்தம் 488 பயனாளிகளுக்கு ரூ.1.14 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், ஆணைகள், பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்.

நிகழ்ச்சிக்குப் பிறகு எம்.பியும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம்  பேசுகையில்,``வறுமையில் இருப்பவர்கள் வாழ்வில் முன்னேறுவதற்காக அரசு மக்களுக்கு இலவசங்களைக் கொடுத்து வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இலவசத் திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது.காமராஜரின் மதிய உணவுத் திட்டம் உள்பட பல இலவசத் திட்டங்கள் ஏழை எளியவர்களுக்கு பயன் அளித்து வருகிறது. இலவசங்கள் கொடுப்பதை பற்றி சிலர் அரசியலுக்காக விமர்சனம் செய்கிறார்கள்'' என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க