வெளியிடப்பட்ட நேரம்: 00:25 (11/11/2018)

கடைசி தொடர்பு:17:13 (12/11/2018)

மேம்பாலத்தில் நின்றால் மிதக்கும் அனுபவம் சிலிர்க்கும் குமரி மக்கள்!

மார்த்தாண்டத்தில் புதிதாகக் கட்டப்பட்ட மேம்பாலத்தின் மீது பொதுமக்கள் நடக்கும்போது மிதப்பதுபோன்ற புதுமையான அனுபவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.


நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரத்தில் மேம்பாலங்கள் அமைக்க மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நடவடிக்கை எடுத்தார். அதில் ரூ.142 கோடியில் நடந்துவந்த மார்த்தாண்டம் மேம்பாலம் அமைக்கும் பணி நிறைவுறும் தருவாயை எட்டிவிட்டது. இதைத் தொடர்ந்து மார்த்தாண்டம் மேம்பாலம் பொதுமக்கள் பார்வைக்காக இன்று மாலை 4 முதல் 7 மணிவரை திறக்கப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பொதுமக்களுடன் கலந்துகொண்டார். இரவு வரை லட்சத்தைத் தொடும் அளவுக்கு மக்கள் மேம்பாலத்தைப் பார்வையிட்டனர். மேம்பாலத்தில் நடந்து செல்லும்போது சிறு அதிர்வு ஏற்பட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதிலும் குழித்துறை தர்மசாஸ்தா கோயில் அருகில் செல்லும்போது பாலத்தில் மிதப்பதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது. இதனால் ``பாலம் ஆடுகிறது" எனப் பொதுமக்கள் கூறினர்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை டிவிஷனல் இன்ஜினீயர் தனசேகர் கூறுகையில், ``மேம்பாலங்களை தாங்கும் பகுதியில் ஸ்பிரிங் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்படிருக்கும். அப்படி அமைத்தால்தான் வாகனங்கள் செல்லும்போது பாலத்துக்கு பாதிப்பு ஏற்படாது. எனவேதான் நடந்துசெல்லும் மக்களுக்கு மிதப்பதுபோன்றும், பாலம் ஆடுவதுபோன்றும் உணர்வு ஏற்படும்" என்றார். ``வாகனங்கள் செல்லுவதற்கு மட்டுமே மேம்பாலம். மேம்பாலங்களில் பொதுவாக மக்கள் நடந்துசெல்ல அனுமதிக்கமாட்டார்கள். சாக் அப்சர்பெர் போன்ற வடிவமைப்பு உள்ளதால் இந்த உணர்வு ஏற்படுவதாகவும் மேம்பாலத்தை வடிவமைத்த கட்டுமான நிறுவனத்தினர் தெரிவித்தனர்.