வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (10/11/2018)

கடைசி தொடர்பு:21:44 (10/11/2018)

`ஏ.ஆர்.முருகதாஸின் உறவினர்களே விலையில்லாப் பொருட்களை வாங்கியுள்ளனர்!' - கோவையில் சீறிய எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

‘தங்கள் கட்சித் தலைவர் கொண்டு வந்த திட்டங்களை கொச்சைப்படுத்துகிற பொழுது தன்மானம் உள்ள எந்தக்கட்சிக்காரணும் கொதித்துதான் எழுவான்.  ஒரு திரைப்படத்திற்கு 900 கோடி வரை செலவு செய்கிறார்கள். அந்தப் பணம் திரையுலகினருக்கு எப்படி வந்தது. 100 ரூபாய் டிக்கெட்டை 1000 ரூபாய்க்கு விற்று ரசிகர்களின் ரத்ததை உரிஞ்சுகிறார்கள். சில நடிகர்கள் விலையில்லா பொருட்கள் குறித்தி தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸின் உறவினர்கள்கூட விலையில்லா பொருட்களை வாங்கியிருக்கின்றனர். அந்தப் பட்டியலை நாங்கள் வைத்திருக்கிறோம்’என்று கோவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இன்று கோவை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ``தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் துரோகம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். அந்த 18 தொகுதிகள் மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மேம்பாலப்பணிகள், சாலைப் பணிகள், கட்டடப்பணிகள் உள்ளிட்ட பல பணிகள் தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வெளிமாநிலத்திலிருந்துதான் தமிழகத்துக்கு வந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்களே ஒழிய, தமிழத்தில் உள்ளவர்கள் வெளிமாநிலங்களுக்குச் செல்லவில்லை. உயர்கல்வி படித்தவர்கள் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்கிறார்கள். தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாமல் வடமாநிலங்களுக்குச் செல்கிறார்கள் என்பதெல்லாம் உண்மை கிடையாது.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வதற்கு அமைச்சரைவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. சட்டரீதியாக உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியிருக்கிறதோ அந்த தீர்ப்பின் அடிப்படையில்தான் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலைச் செய்திருக்கிறோம். நாங்கள் கோப்புகளை கவர்னருக்கு அனுப்பிவிட்டோம். இந்த விவகாரத்தில் இனி  கவர்னர்தான் முடிவெடுக்க வேண்டும். 

தி.மு.கவினர் அடிக்கடி பச்சோந்திபோல நிறம் மாறக்கூடியவர்கள். இதே தி.மு.கவினர்தான் முன்பு,  பி.ஜே.பியுடன் கூட்டணி சேர்ந்தார்கள். அப்போது, அவர்களுக்கு ஓரளவுக்கு பெரும்பான்மை கிடைத்தது. பி.ஜே.பி அமைச்சரவையிலும் தி.மு.க இடம்பெற்றிருந்தது. முரசொலிமாறன் உடல்நலம் குன்றி பேச்சுமூச்சு இல்லாமல் மருத்துவமனையில் இருந்தபோதும்கூட அப்போதைய பி.ஜே.பி அரசு அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து வைத்திருந்தது. அப்போது `பி.ஜே.பி அரசு நல்ல அரசு’ என்று பாராட்டிய தி.முகவினர் இப்போது, பி.ஜே.பியை தீண்டத்தகாத கட்சி, மதவாதக்கட்சி என்று சொல்கிறார்கள். நாங்கள் அப்படி இல்லை. எங்கள் கொள்கையில் எப்போதும் பிடிப்போடு இருக்கிறோம்.

எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு தமிழக மக்களின் பேராதரவோடு 37 இடங்களில் வெற்றிபெற்று, இந்திய அளவில் மூன்றாவது பெரியக்கட்சியாக அ.தி.மு.க என்ற பெருமையை தமிழகத்திற்கு தேடித்தந்தார். அன்றிலிருந்து இன்று வரைக்கும் நாங்கள் யாரோடும் கூட்டணி வைக்கவில்லை. தேர்தல் சமயத்தில் அதைப் பற்றி தெரிவிப்போம். தமிழகத்திற்கு யார் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களோ, அவர்களுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம். தமிழக மக்களின் உரிமைகளை காப்பதற்காகவும் தமிழக மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய திட்டங்களைப் பெறுவதற்காகவும் மத்திய அரசோடு இணக்கமாக இருக்கிறோமே ஒழிய, கூட்டணி கிடையாது. ஆனால், தி.மு.கவினர் அப்படி இல்லை. பி.ஜே.பி சறுக்கியபொழுது உடனடியாக மாறி காங்கிரஸோடு கூட்டணி சேர்ந்து மத்தியில்  அமைச்சராக ஆனவர்கள்.  காலத்திற்கு ஏற்றார்போல் தங்களுடைய கொள்கைகளை மாற்றிக்கொள்வார்கள்.

அதேபோலதான் சந்திரபாபு நாயுடுவும் பி.ஜே.பியோடு கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு வெற்றிபெற்று நான்கரை ஆண்டுகாலம் பதவிகளை அனுபவித்துவிட்டார். இப்போது தேர்தல் வருகிறபொழுது பச்சோந்திபோல மாறிக்கொள்கிறார். ஸ்டாலின் இவ்வளவு பேசுகிறாரே... பலாற்றின் குறுக்கே 20-க்கும் மேற்பட்ட அணைகள் கட்டுகிறார்கள். தண்ணீர் இல்லாமல் வட மாவட்டங்கள் வறண்டுபோயுள்ளன. உண்மையிலேயே மனசாட்சி இருந்தால், தமிழக மக்களின் மீது அன்பு இருந்திருந்தால் இப்போது வந்துவிட்டுபோன சந்திரபாபு நாயுடுவிடம் அதைப்பற்றி பேசியிருக்கலாம். தமிழகத்திற்கு வரக்கூடிய தண்ணீரை ஏன் தடுத்தி நிறுத்துகிறீர்கள் என்று கேள்வி கேட்டிருக்கலாம். ஆனால், அவர்களுக்கு மக்களைப் பற்றிய கவலை கிடையாது. அதிகாரமும் பதவியும்தான் முக்கியம். 

சர்கார் திரைப்படம் தொடர்பான பேனர்களை அ.தி.முகவினர் கிழித்தார்கள் என்பது தவறான தகவல். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பொதுமக்களோடு சேர்ந்து அ.தி.மு.கவினரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள். அதனால், அந்தப்படத்தில் குறிப்பிட்ட காட்சியை நீக்கியிருக்கிறார்கள். தங்கள் கட்சித் தலைவர் கொண்டு வந்த திட்டங்களை கொச்சைப்படுத்துகிற பொழுது தன்மானம் உள்ள எந்தக் கட்சிக்காரணும் கொதித்துதான் எழுவான். சர்கார் பிரச்னை சுமுகமாக முடிந்துவிட்டது. ஊடகங்கள் இனி இதை பெரிதுப்படுத்த வேண்டாம்.  ஒரு திரைப்படத்திற்கு 900 கோடி வரை செலவு செய்கிறார்கள். அந்தப் பணம் திரையுலகினருக்கு எப்படி வந்தது?. 100 ரூபாய் டிக்கெட்டை 1000 ரூபாய்க்கு விற்று ரசிகர்களின் ரத்ததை உறிஞ்சுகிறார்கள். அதை ஏன் ஊடகங்கள் வெளியிடுவதில்லை?. சில நடிகர்கள் விலையில்லாப் பொருட்கள் குறித்தி தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸின் உறவினர்கள்கூட விலையில்லா பொருட்களை வாங்கியிருக்கின்றனர். அந்தப் பட்டியலை நாங்கள் வைத்திருக்கிறோம். விலையில்லா திட்டங்களால்தான் உயர்கல்வியில் தமிழகம் 46.8 சதவிகிதமாக சிறந்து விளங்குகிறது. படத்தில் கோடிகோடியாக சம்பாதிக்கும் திரையுலகினர் மக்களுக்கு என்ன செய்திருக்கின்றனர்?.  

கமல் படத்திற்கு பிரச்னை வருகிறபொழுது இந்த நாட்டைவிட்டு போகிறேன் என்று சொன்னார். இவர் மக்கள் பிரச்னைக்கு என்ன தீர்வு கண்டுவிடப்போகிறார். கமலுக்கு வயது 64 ஆகிவிட்டது. 64 வரைக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருந்து சினிமாத் துறையிலிருந்து ரிட்டையர்டு ஆகிவிட்டார். மக்களும் அவரைக் கண்டுகொள்ளவில்லை. அங்கே அவருக்கு மதிப்பு இல்லை. ஆகையால் நடிப்பதை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்து நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறார். சினிமாவிலேயே அவர் நடிப்பு எடுபடாமல் போனபிறகு இங்கே அவர் நடிப்பு எடுபடாது’’ என்றவர், ``இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது ஜனநாயகப் படுகொலை. இலங்கையில் உள்ள தமிழக மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். மத்திய அரசு தேவையான பாதுகாப்பை அவர்களுக்கு வழங்க வேண்டும்’’ என்றார்.