வெளியிடப்பட்ட நேரம்: 02:01 (11/11/2018)

கடைசி தொடர்பு:02:01 (11/11/2018)

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவிகள் - ரஜினி மக்கள் மன்றத்தினர் அசத்தல்!

‘‘ரஜினி அங்கிள் ரொம்ப நல்லவர்... அவர் அரசியலுக்கு வந்தால் நல்ல திட்டங்களை கொண்டுவருவார்’’ என்று வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகள் சுட்டித்தனமாகப் பேசினர்.

ரஜினி

வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் மற்றும் புதுவாழ்வு சரணாலய அறக்கட்டளை இணைந்து கடுமையான உயிர்க்கொல்லி நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த மாவு பொருட்கள், இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி வேலூரில் உள்ள அன்பு இல்லத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய சில குழந்தைகள், ‘‘ரஜினி அங்கிள் ரொம்ப நல்லவர். எங்களைப் போன்ற குழந்தைகள் அவரை ரொம்ப நேசிக்கிறோம். ஏனென்றால், எங்களைப் போன்ற அன்பு இல்லங்களில் இருப்பவர்களுக்காகவே அவர் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் தான் எங்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக உள்ளது. நாங்கள் என்ன தவறு செய்தொம் என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் கடவுள் இந்த கொடிய நோயை எங்களுக்குப் பரிசாக வழங்கியுள்ளார். ரஜினி அங்கிள் அரசியலுக்கு வந்த பிறகு எங்களைப் போன்றோருக்கு நல்ல திட்டங்களை கொண்டுவருவார்’’ என்று நம்பிக்கை உள்ளது’’ என்றனர். சுட்டித்தனமாகச் சிரித்து கொண்டே தங்களது சோகங்களைக் குழந்தைகள் பகிர்ந்துகொண்டதைப் பார்த்து, அங்குக் கூடியிருந்த அனைவரும் கண்கலங்கினர். 

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் சோளிங்கர் என்.ரவி பேசுகையில், ‘‘எங்கள் தலைவர் குழந்தைகள் மீது அதிக அக்கறை உள்ளவர். நல்லதையே நினையுங்கள். நல்லதே நடக்கும் என்றார். தொடர்ந்து பேசிய மாவட்ட இணை செயலாளர் நீதி என்கிற அருணாசலம், ‘‘நவம்பர்-14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு உங்களுக்கு உதவ வந்தோம். ரஜினி மக்கள் மன்றம் மூலம் பல்வேறு நற்பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இங்கே உங்களுக்கு உதவுவது எங்களுக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது’’ என்றார். 
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் கணபதி மற்றும் ராஜன்பாபு, மகளிரணி செயலாளர் சங்கீதா, வர்த்தக அணி செயலாளர் அருணகிரி, வழக்கறிஞர் அணி செயலாளர் பாலாஜி, மாநகர இணை செயலாளர் அக்பர்பாஷா, மாவட்ட தகவல் தொழில் நுட்ப துணைச் செயலாளர் கோகுல், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் குணசேகர் மற்றும் தனசேகர், மாநகர மகளிர் அணி செயலாளர் லஷ்மி ரமேஷ், துணைச் செயலாளர் சௌமியா, மண்டல செயலாளர்கள் மோகன், பாண்டு, ராஜா, ராஜ்குமார், மாநகர செயற்குழு உறுப்பினர் மைக்கேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.