வெளியிடப்பட்ட நேரம்: 22:51 (10/11/2018)

கடைசி தொடர்பு:10:10 (11/11/2018)

பி.எம்.டபிள்யூ காருக்குள் புகுந்த 5 அடி கோப்ரா - அதிர்ந்த கார் ஓனர்!

பி.எம்.டபிள்யூ காரில் நாகப்பாம்பு

உயர் ரக பி.எம்.டபிள்யூ காரில் 5 அடி நீள  நாகப்பாம்பு தஞ்சம்புகுந்த சம்பவம் கோவையில் நடந்துள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த பனியன் கம்பெனி உரிமையாளர் ஒருவர், திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்று திருப்பூரில் இருந்து முத்தூருக்கு தனது உறவினரோடு தனது பி.எம்.டபிள்.யூ காரில் சென்றுள்ளார். 

கார் முத்தூர் அருகே உள்ள வரட்டுக்கரை என்ற இடத்தைக் கடக்கும்போது, நடுரோட்டில் பாம்பு ஒன்று காரின் முன்னால் படம் எடுத்தபடி இருந்துள்ளது. அதைக் கண்டதும் காருக்குள் இருந்தவர்களுக்கு அதிர்ச்சி. காரை நிறுத்திவிட்டு காருக்குள் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.  தீயணைப்பு துறையினர் அந்த இடத்திற்கு விரைவதற்குள் அந்தப் பாம்பு காருக்குள் புகுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் அவர்களால் காருக்குள் புகுந்த பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

உடனடியாக அந்தக் கார் கோவையில் உள்ள பி.எம்.டபிள்.யூ சர்வீஸ் செண்டருக்கு கொண்டு செல்லப்பட்டது. பிறகு பாம்பு பிடிக்கும் நபரான சஞ்சய் அழைக்கப்பட்டார். மெக்கானிக் உதவியோடு, சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி காருக்குள் பதுங்கிருந்த பாம்பை சஞ்சய் லாகவமாகப் பிடித்து வெளியே எடுத்தார். பிடிபட்டது நாகப்பாம்பு என்பது தெரியவந்தது. அதன் பின்பு, அந்தப் பாம்பு பாதுகாப்பாக மதுக்கரை வனப்பகுதியில் விடப்பட்டது.