வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (11/11/2018)

கடைசி தொடர்பு:12:15 (11/11/2018)

வி.ஐ.பிகளுக்கு 63 அறைகள், சீல் வைக்கப்பட்டது 308 அறைகள் - திருச்செந்தூர் வரும் பக்தர்கள் குற்றச்சாட்டு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சரியான பராமரிப்பு இல்லாததால் அடிப்படை வசதிகளும் போதிய அளவில் முறையாக செய்யப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர் வெளியூர் பக்தர்கள். 

திருச்செந்தூர்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில், இரண்டாம் படைவீடுதான் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் கந்த சஷ்டி விழாவும் ஒன்று. இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா கடந்த 8-ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 13-ம் தேதி நடைபெறுகிறது. சஷ்டி விரதம் மேற்கொள்ள வரும் வெளியூர் பக்தர்கள் வழக்கமாக திருக்கோயில் வளாகத்தில் உள்ள விடுதிகள் மற்றும் குடில்களில் அறைகள் எடுத்து தங்குவார்கள்.

கடந்த டிசம்பர் 15-ம் தேதி திருக்கோயில் கிரிப்பிரகாரத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மோர் விற்றுக் கொண்டிருந்த பேச்சியம்மாள் என்ற பெண் பலியானார். இதனையடுத்து கிரிப்பிரகார மண்டபம் முற்றிலும் இடிக்கப்பட்டது. தொடர்ந்து, திருக்கோயிலில் உள்ள மற்ற கட்டிடங்களில் பொறியாளர்கள் குழு மேற்கொண்ட ஆய்வில், செந்தில் ஆண்டவர் விடுதியில் 80 அறைகள், வேலவன் விடுதியில் 73 அறைகள், ஜெயந்திநாதர் விடுதியில் 111 அறைகள், ஆறுமுகவிலாஸ் விடுதியில் 24 அறைகள், வேலவன் குடியிருப்பில் 2 அறைகள் மற்றும்  18 சிறுகுடில்கள் என மொத்தம் 308 அறைகள் பக்தர்கள் தங்குவதற்கு ஏற்றது அல்ல எனவும், அவற்றை இடிக்க வேண்டும் எனவும் அறிக்கை அனுப்பபட்டது. இதன் அடிப்படையில், கடந்த 25-ம் தேதி 308 அறைகளுக்கு பூட்டு போடப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

 ‘மொத்தமுள்ள  401 அறைகளில், பழுதடைந்த 308 அறைகள் பக்தர்களின் பாதுகாப்பு கருதி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதில், மீதமுள்ள 93 அறைகளில் கடந்த 5 ஆண்டுகளில் பெரிய அளவில் நன்கொடை உபயம் வழங்கியவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் முதல் 20 நபர்களுக்கும், பாதி நன்கொடை திட்டத்தின் நன்கொடையாளர்கள் பட்டியலில் முதல் 15 நபர்களுக்கும், அனைத்து துறை அலுவலர்களுக்கு 20 அறைகளும், முக்கியப் பிரமுகர்கள் 8 நபர்களுக்கும் என மொத்தம் 63 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 30 அறைகள் மட்டுமே பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.” என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து வெளியூர் பக்தர்கள் கூறுகையில்,” திருச்செந்தூர் என்றாலே சஷ்டிவிரதம்தான். வெளியூர், வெளி மாநில பக்தர்கள்தான் அதிகளவில் வருவார்கள். இந்த வருடம் விடுதிகளில் உள்ள 308 அறைகளுக்கு சீல் வைத்துவிட்டது கோயில் நிர்வாகம். பிரைவேட் லாட்ஜூகளில் குறைந்த பட்சமாக ஒருநாள் வாடகை 4 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை சொல்கிறார்கள். 6 நாட்கள் கோயிலில் சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களால் இவ்வளவு தொகையை வாடகையாக கொடுக்க முடியுமா?   தற்காலிகமாக கோயில் வளாகத்தில் 9 தற்காலிக தகரக் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது. திடீர் திடீரென மழை பெய்கிறது. குழந்தைகளை வைத்துக்கொண்டு அங்கு தங்க முடியவில்லை. சரியான கழிப்பறை வசதிகள் இல்லை.  பெண்கள் நிலைமை பரிதாபம். அடிப்படை வசதிகள் எதுவுமே சரியில்லை. மாதம் 2 முறை  உண்டியலில் காணிக்கை எண்ணபடுகிறது. மாதம் சராசரியாக ரூ.1 கோடி வருமானம் வருகிறது. இது தவிர விடுதிகள், அபிசேக கட்டணம், தரிசன கட்டணம், டோல்கேட், கடை குத்தகை, கட்டளைகள் என வருடத்திற்கு ரூ.40 கோடி வரை வருமானம் கிடைக்கிறது. ஆனால், பக்தர்களுக்கான எந்த வசதிகளுமே செய்யவில்லை என்பதுதான் வேதனைக்குரியது.” என்றனர்.   

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க