வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (11/11/2018)

கடைசி தொடர்பு:14:09 (13/11/2018)

ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் பறவைகள்! வெறிச்சோடிய வேடந்தாங்கல்!

ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் பறவைகள்! வெறிச்சோடிய வேடந்தாங்கல்!

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகளின்வரத்து காரணமாக வழக்கமாக செப்டம்பரிலேயே சீசன் தொடங்கிவிடும். ஆனால், இந்தாண்டு  நவம்பர் மாதம் வந்தும் பறவைகள் இல்லாத காரணத்தால் வெறிச்சோடிக் காணப்படுகிறது வேடந்தாங்கல்.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ளது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். உலகப் புகழ்பெற்ற இந்த சரணாலயத்தில் நவம்பர் மாதத்தில் பறவைகள் அதிகம் காணப்படும். இதனால் சுற்றுலாப் பயணிகள் வேடந்தாங்கலுக்கு அதிக அளவில் வருவார்கள். கடந்த வருடம் தென்மேற்குப் பருவமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு ஓரளவு நீர்வரத்து இருந்தது. வடகிழக்குப் பருவமழையும் குறிப்பிட்ட பருவத்தில் பெய்யத் தொடங்கியதால், வேடந்தாங்கலைச் சுற்றியுள்ள ஏரிகளில் நீர்வரத்து கணிசமாக இருந்தது. விவசாயப் பணிகளும் தொடங்கின. இதனால் நத்தைக்கொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், பெரிய நீர்க்காகம், சிறிய நீர்க்காகம், வக்கான், கூழைக்கடா உள்ளிட்ட ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட சுமார் 20 வகையான பறவைகள் வந்திருந்தன. ஆனால் இந்த வருடம் வடகிழக்குப் பருவமழைக் காலம் தொடங்கியும் மழை இல்லை. வேடந்தாங்கல் ஏரியில் தண்ணீர் இல்லாததால் பறவைகள் ஏமாற்றத்துடன் மற்ற நீர்நிலைகளுக்குச் சென்று விடுகின்றன. வேடந்தாங்கலுக்கு அருகில் உள்ள கருக்கிலி சரணாலயத்திலும் இதே நிலைதான் நீடிக்கிறது. தீபாவளிப் பண்டிகையின்போது வேடந்தாங்கல் கிராமத்தினர் பறவைகளுக்குத் தொந்தரவு ஏற்படும் என்பதால் பட்டாசு வெடிக்க மாட்டார்கள். ஆனால், இந்த வருடம் பறவைகள் இல்லாத காரணத்தால் வெடிவெடித்து தீபாவளியைக் கொண்டாடினார்கள். சாலை ஓரத்தில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு செல்லும் வழிகாட்டி பலகைகள் மற்றும் ஓவியங்களின் மீது போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. அப்பகுதி மக்களிடம் விழிப்புஉணர்வு ஏற்படுத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

வேடந்தாங்கல் வனச்சரகர் சுப்பையாவிடம் பேசினோம் “பருவமழை சரியாக பெய்தால் செப்டம்பர் மாதத்திலேயே சீசன் ஆரம்பித்துவிடும். 2016-ல் செப்டம்பர் 30 -ம் தேதியும் கடந்த வருடம் அக்டோபர் 16-ம் தேதியும் சரணாலயம் திறக்கப்பட்டது. சுமார் 5,000 பறவைகள் இருந்தாலே சரணாலயத்தை திறந்து விடுவோம். பொதுமக்கள் நுழைவுக் கட்டணம் செலுத்துவார்கள் என்பதால் அவர்கள் ஏமாற்றம் அடையக் கூடாது என்பதற்காக இன்னும் சரணாலயம் திறக்கப்படவில்லை. வருடந்தோறும் சுமார் 40,000 பறவைகள் இங்கே வந்து இனப்பெருக்கம் செய்து மூன்று மடங்காகச் செல்லும்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

நத்தைக் கொத்தி நாரைதான் முதலில் வரும். அதைத் தொடர்ந்து பெரிய நீர்க்காகம், வக்கான், கூழைக்கடா உள்ளிட்ட பறவைகளும் வரத்தொடங்கும். இந்த பறவைகள் எல்லாமே இந்த வருடமும் வந்தது. ஒரு வாரம் அந்தப் பறவைகள் இங்கே தங்கி இனப்பெருக்கம் செய்வதற்கான சூழல் இருக்கிறதா என ஆய்வு செய்யும். போதிய அளவு தண்ணீர், உணவு, கூடுகட்டும் வசதி உள்ளிட்ட காரணிகள் இருந்தால்தான் இனப்பெருக்கம் செய்யத் தொடங்கும். சுப்பையா, வனச்சரகர்மேகங்கள் அதிக அளவில் திரண்டு குளிர்ச்சியான சீசன் இருக்கும் போது சுமார் 400க்கும் மேற்பட்ட பறவைகள் வரத்தொடங்குகின்றன. மழைபெய்யாமல் மேகங்கள் கலைந்துவிடுவதால், வந்த பறவைகள் ஏமாற்றத்துடன் மற்ற நீர்நிலைகளுக்குச் செல்கின்றன.ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்து வைத்திருக்கிறோம். வருடந்தோறும் தென்மேற்கு பருவமழையின் போது பாதி ஏரி நிறைந்துவிடும். வடகிழக்கு பருவமழையில் ஏரி முழுமையாக நிரம்பிவிடும். ஆனால் இந்த வருடம் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. அதுபோல் வடகிழக்கு பருவமழையும் கடந்த சிலதினங்களாக பெய்யும் என எதிர்பார்த்த நிலையில், மழைபெய்யாதது தொடர்ந்து ஏமாற்றத்தையே அளிக்கிறது. மழைபெய்யத் துவங்கினால் வெளியில் இருக்கும் சரணாலயத்திற்கு பறவைகள் வரத் தொடங்கிவிடும்” என்கிறார்.

மழை வரட்டும் எனப் பறவைகளோடு ஒட்டு மொத்த தமிழக மக்களும் காத்திருக்கிறார்கள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்