வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (11/11/2018)

கடைசி தொடர்பு:13:15 (11/11/2018)

மர்மமான முறையில் உயிரிழந்த கார் டிரைவர்! - மாட்டுவண்டி அடியில் கிடந்த சடலம்

வேலூரில் பி.டி.ஓ. கார் டிரைவர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவர், கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிரைவர்

வேலூர் பலவன்சாத்துக்குப்பத்தை சேர்ந்தவர் நாகராஜன் (40). அணைக்கட்டு பி.டி.ஓ. அலுவலகத்தில் திட்ட பி.டி.ஓ. இமயவரம்பனின் கார் டிரைவராக புணிபுரிந்துவருகிறார். இவரின் மனைவி பகவதி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நாகராஜனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறபடுகிறது. இந்த நிலையில் தன் மகளுக்குச் சிறுநீரக பிரச்னை உள்ளது. மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்றுக்கூறி கடந்த 1-ம் தேதி முதல் நாகராஜன் விடுமுறையில் இருந்திருக்கிறார்.  

இந்நிலையில், நேற்று மாலை அவர், ரூ.4 ஆயிரம் பணத்துடன் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.  பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை. இன்று காலை பலவன்சாத்துக்குப்பம் அருகே எழில் நகரில் நிறுத்தப்பட்டிருந்த மாட்டுவண்டிக்கு அடியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் நாகராஜன். இதுபற்றி தகவலறிந்த பாகாயம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டனர். நாகராஜனின் உடலில் காயங்கள் இருந்தன. குடும்பத்தினரும் பதறியடித்துக் கொண்டு வந்து சடலத்தை கட்டித்தழுவிக் கதறி அழுதனர். நாகராஜனிடம் இருந்த ரூ.4 ஆயிரம் பணம், செல்போன் காணவில்லை. எனவே, அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.