வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (11/11/2018)

கடைசி தொடர்பு:14:20 (11/11/2018)

‘நெல்லை மருத்துவமனை வளாகத்தில் டெங்கு லார்வாக்கள்..ஆய்வில் அதிர்ச்சி’- அபராதம் விதித்த ஆட்சியர்

நெல்லை மாவட்டத்தில் டெங்கு பன்றிக்காய்ச்சல் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சுகாதாரத்தை பராமரிக்காமல் டெங்கு கொசுப்புழுக்கள் வளர்ந்த நிலையில் சுகாதாரமற்றுக் காணப்பட்ட நெல்லை அரசு மருத்துவமனை மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.   

அரசு மருத்துவமனைக்கு அபராதம்

தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரக்கூடிய டெங்கு தடுப்புப் பணிகளை தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் சத்தியகோபால் இன்று ஆய்வு செய்தார். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கிணறுகள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, கீழ் நிலை நீர்தேக்கத் தொட்டி ஆகியவற்றை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அத்துடன், மருத்துவமனை வளாகத்தில் உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து ஆய்வு செய்யப்பட்டது, ஒரு கிணற்றில் ஆய்வின் போது டெங்கு கொசுவுக்கான லார்வா புழுக்கள் தண்ணீரில் வளர்ந்து வருவதை அவர் கண்டுபிடித்தார். டெங்கு உருவாக்கும் கொசுப்புழுக்களை உடனடியாக அழிக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்துக்கு கண்டிப்புடன் அவர் உத்தரவிட்டார். 

மருத்துவமனை வளாகத்திலேயே சுகாதாரம் இல்லாமல் டெங்கு பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை இருப்பதைக் கண்டு கோபம் அடைந்த சத்தியகோபால், மருத்துவமனை நிர்வாகத்துக்கு அபராதம் விதிக்குமாறு நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷுக்கு பரிந்துரை செய்தார், அதைத் தொடர்ந்து அருகில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காந்திமதி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். 

பள்ளி வளாகத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் இருப்பதைக் கண்டுபிடித்ததால் அந்தப் பள்ளிக்கும் அபராதம் விதிக்குமாறு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்ற நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ், அரசு மருத்துவமனைக்கு ரூ.2000 மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காந்திமதி மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். 

பேரிடர் மேலாண்மை ஆணையர் சத்தியகோபால்

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பேரிடம் மேலாண்மை ஆணையர் சத்தியகோபால், ‘’கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் தாக்கம் குறைவாகவே உள்ளது, இருந்த போதிலும் டெங்கு வைரஸ் எங்கும் இருக்க கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு பொதுமக்களும் முழு அளவில் ஒத்துழைக்க வேண்டும் அப்போதுதான் டெங்கு கொசுவை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும். 

தமிழக அளவில் மாவட்டம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை காலை 6 மணி முதல் 7 மணி வரை வணிக கட்டிடங்கள், கொசு உற்பத்தியாகும் இடங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம். கஜா புயலின் தாக்கம் வட தமிழகத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. இந்த ஆண்டு புதிதாக பேரிடர் காலத்தில் பணி செய்வதற்காக ரெட்கிராஸ் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் இணைந்துள்னர். 

தமிழகம் முழுவதும் 1500 தன்னார்வலர்கள் உள்ளனர். பேரிடர் காலங்களில் அந்தந்தப் பகுதிகளில் முதல்கட்ட மீட்பு மற்றும் உதவிகளை அவர்கள் மேற்கொள்வார்கள் .புயலின் காரணமாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, கடந்த 8-ம் தேதி முதலாகவே மீனவர்கள் கடலின் ஒரு சில பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கும் பணிக்குச் சென்றுள்ள மீனவர்கள் 12-ம் தேதி மாலைக்குள் கரை திரும்ப வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம்’’ எனத் தெரிவித்தார். 

ஆய்வுப் பணியின் போது மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் கண்ணன், சுகாதார துணை இயக்குநர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.