வெளியிடப்பட்ட நேரம்: 14:53 (11/11/2018)

கடைசி தொடர்பு:14:53 (11/11/2018)

`பிசுபிசுத்த இரண்டாம் நாள் உண்ணாவிரதம்!' - அதிர்ச்சியில் அ.ம.மு.க தொண்டர்கள்

நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நியாயம் வேண்டும் என்ற கோஷத்துடன் தினகரன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள் அ.ம.மு.கவினர். தங்கதமிழ்ச்செல்வனின் தொகுதியான ஆண்டிபட்டியில் நேற்று உண்ணாவிரதம் நடந்தது. அதைத்தொடர்ந்து இன்று திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இரண்டாயிரம் நாற்காலிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

உண்ணாவிரதம்

காலை 10 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தங்கத்துரை உள்ளிட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிக கூட்டம் வரும் என எதிர்பார்த்தவர்களுக்குக் காலையிலிருந்தே ஏமாற்றம்தான் மிஞ்சியது. நிர்வாகிகள் உட்பட  நூறு பேர் மட்டுமே உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளனர். வாடகைக்கு எடுத்து நாற்காலிகள் ஓரமாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கூட்டம் மிகவும் குறைவாக இருப்பது நிர்வாகிகளிடம் சோர்வை ஏற்படுத்தி உள்ளது. இன்று மாலை இங்கு தினகரன், தங்கத் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு உண்ணாவிரதத்தை முடித்து வைக்க இருக்கிறார்கள். எனவே அவர்கள் வருவதற்குள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற முனைப்பில் நிர்வாகிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். 

உண்ணாவிரதம்

தமிழகத்திலேயே திண்டுக்கல் மாவட்டத்தில் தான் அ.ம.மு.க இரண்டு கோஷ்டியாக பிரிந்து இருக்கிறது. மாநகர செயலாளர் ராமுத்தேவர் ஒரு கோஷ்டியாகவும், கிழக்கு மாவட்ட செயலாளர் தங்கத்துரை ஒரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகிறார்கள். கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு உண்ணாவிரதத்தில் எதிரொலித்துள்ளது. தி.மு.கவும், அ.தி.மு.கவும் இந்த தொகுதியில் ஆலோசனை கூட்டத்தை முடித்து, தேர்தல் பணியில் குதித்துவிட்டன. இந்நிலையில், உண்ணாவிரதம் மூலமாகப் பிரசாரத்தை தொடங்கவிருந்த அ.ம.மு.கவினர் தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் உண்ணாவிரதத்துக்கு போதுமான ஒத்துழைப்பு இல்லாததால் அதிர்ச்சியில் உள்ளனர். இதே நிலைமை நீடித்தால் நிலக்கோட்டை தொகுதி வெற்றி மிகப்பெரிய கேள்விக்குறியாகும் என அ.ம.மு.க தொண்டர்கள் பேசிக் கொள்கிறார்கள். உண்ணாவிரதம் தொடங்கிய இரண்டாம் நாளே போதிய வரவேற்பு இல்லாததைக் கண்டு அ.தி.மு.க தொண்டர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க