மரக்காணத்தில் கலவரம்: பேருந்துகளுக்கு தீ வைப்பு: போலீஸ் துப்பாக்கிச் சூடு!

விழுப்புரம்:  மரக்காணம் அருகே சித்திரை முழு நிலவு விழாவில் கலந்துகொள்ள வந்த பாமகவினர் கலவரத்தில் ஈடுபட்டதால், கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

மாமல்லபுரத்தில் இன்று நடைபெறும் சித்திரை முழு நிலவு விழாவில் கலந்துகொள்வதற்காக ஏராளமான வாகனங்களில் பாமகவினர் மற்றும் வன்னிய சங்கத்தினர் வந்துகொண்டிருந்தனர்.

அவர்களில் சுமார் 20 வேன்களில் வந்தவர்கள், திடீரென்று மரக்காணத்தில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில்  இறங்கி அங்கிருந்த காலனி பகுதிக்குள் புகுந்தனர். பின்னர் கைகளில் வைத்து இருந்த தடி, கம்பு மற்றும் பீர் பாட்டில்களால் அங்கு இருந்தவர்களை தாக்கினார்கள்.

கலவரக்கும்பலிலிருந்து தப்பிக்க காலனி மக்கள்,  மரக்காணம் கடற்கரை ஓரம் உள்ள சவுக்கு தோப்புக்குள் புகுந்து தஞ்சம் அடைந்தனர்.

இதற்கிடையே மரக்காணம் கடற்கரை சாலையில் கலவரக் கும்பலில் ஒரு பிரிவினர் திடீரென்று பெட்ரோல் குண்டுகளை வீசினர். மேலும் அங்கு இருந்த வீடுகள் மற்றும் கடைகளுக்கும் தீ வைத்ததோடு,  கல்வீச்சு தாக்குதலிலும் ஈடுபட்டனர்.

மேலும் அவ்வழியாக வந்த 5 பேருந்துகளுக்கு தீ வைத்ததோடு, மாவட்ட போலீஸ் எஸ்.பி.யின் வாகனத்தையும் தாக்கி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த கலவரத்தில் 10 க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும், இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீசார் கலவரத்தை அடக்க வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும்,இதனையடுத்து கலவரக்காரர்கள் கலைந்து ஓடியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கலவரம் காரணமாக மரக்காணத்தில் பதற்றம் நிலவுவதால் கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
 

பயணிகள் தவிப்பு

இந்நிலையில்,  தீ வைக்கப்பட்ட பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளும், கலவரம் காரணமாக ஆங்காங்கே ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாகவும் 100 கணக்கான பயணிகள் வழியில் தவித்து நின்றனர். 

பாமகவினர் வாகனம் மோதி வாலிபர் பலி

இதனிடையே சித்திரைத் திருவிழாவில் கலந்துகொள்ள  காரைக்காலில் இருந்து வந்த பா.ம.க.வினரின் வாகனம் ஒன்று, கடலூர் தபால் அலுவலகம் அருகே வந்தபோது, தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த மாணவர் அணி உறுப்பினர் சஞ்சீவி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.

இறந்து போன சஞ்சீவி பி.எஸ்.சி.படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!