வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (12/11/2018)

கடைசி தொடர்பு:08:23 (12/11/2018)

`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்துகொண்டார். 

ஓபிஎஸ் ஆலோசனைக்கூட்டம்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றது. இதற்காக ஆளுநருக்கு இரண்டு முறை பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளோம். வடகிழக்குப் பருவமழையால், தற்போது உருவான புயலை சமாளிப்பதற்கு தமிழக அரசு சார்பாக அனைத்து உதவிகளையும் எடுத்துள்ளோம். தமிழகத்தில் 18 தொகுதிகள் மட்டும் புறக்கணிக்கவில்லை. 234 தொகுதிகளுக்கு ஒரே மாதிரியாக நலத்திட்டங்களை செய்து வருகிறோம். 1996 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற டி.டி.வி.தினகரன், 2004-ம் ஆண்டு தோற்றதற்கு காரணம் அவரின் செயல்பாடு சரியில்லை என்பதே. இரட்டை இலை சின்னம் வெற்றிச் சின்னமே. வருகின்ற தேர்தலிலும் வெற்றி பெறும். அரசியலில் அ.தி.மு.க-வுக்கு தி.மு.க தான் எதிரி. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கியது சசிகலா கிடையாது. சட்டமன்ற உறுப்பினர்கள்தான். 

ஓபிஎஸ்


ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமரைவிட சிறந்தவர் ஸ்டாலின் என கூறியுள்ளார். தி.மு.க தலைவர் ஸ்டாலின், பாலற்றில் குறுக்கே தடுப்பணை கட்டவேண்டாம் என்று ஏன் கோரிக்கை வைக்கவில்லை. தேர்தலுக்கு அ.தி.மு.க பணம் கொடுக்க உள்ளது என்ற தினகரன் குற்றச்சாட்டு பொய். தேர்தலின்போது மக்களுக்கு அ.தி.மு.க பணம் கொடுக்காது. பின்னர்  பணம் தருவோம் என்றும் கூறமாட்டோம். தினகரன் ஆர்.கே.நகரில் 20 ரூபாயைக் கொடுத்ததால் மக்கள் வாங்குவதற்கே பயப்படுகின்றனர். எந்த ஒரு மக்கள் விரோ திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த மாட்டோம். இந்த வியூகத்தின் அடிப்படையிலே தேர்தலை சந்திப்போம்" என்றார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன், தேனி எம்.பி பார்த்திபன் ஆகியார் கலந்துகொண்டனர்.