வெளியிடப்பட்ட நேரம்: 15:42 (12/11/2018)

கடைசி தொடர்பு:16:15 (12/11/2018)

``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை!" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி

"பண்டிகை உற்சாகத்தில் மகிழ்ச்சியா வரவேற்பாங்கனு நினைச்சா, குடும்பத்தினர் எல்லோரும் அழுகையுடன் என்னை வரவேற்றப்போ எனக்கு ஒண்ணுமே புரியலை. என்னைப் பார்த்த பிறகுதான் தூங்குவேன்னு சொன்ன என் கணவர், பேச்சு மூச்சில்லாம சடலமாக இருந்தார்."

சின்னத்திரை நடிகர் விஜயராஜன் கடந்த வாரம் மாரடைப்பால் உயிரிழந்தார். இச்செய்தி, சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தன் கணவரின் இறுதி நிமிடங்கள் மற்றும் அவர் நினைவுகளை கண்ணீருடன் பகிர்கிறார், விஜயராஜனின் மனைவி ராமலட்சுமி.

விஜயராஜன்

``என் கணவரின் சொந்த ஊர், பழநி. நாங்க இருவரும் சொந்தக்காரங்க. 2008-ல் எங்களுக்குக் கல்யாணமாச்சு. அப்போவே இவர் சின்னத்திரை மற்றும் சினிமாவுல ஓரளவுக்கு நடிச்சுகிட்டு இருந்தார். அவருக்கு டைரக்‌ஷன், நடிப்புன்னா ரொம்ப இஷ்டம். நடிகரா புகழ் பெறணும்னு வாய்ப்புத்தேடி நிறைய மெனக்கெட்டார். அதுக்காகவே கல்யாணத்துக்குப் பிறகு சென்னையில குடியேறினோம். எங்க ஒரே பொண்ணு ஐஸ்வர்யா, ரெண்டாவது படிக்கிறாள். நான் டீச்சர் ட்ரெயினிங் கோர்ஸ் போயிட்டிருக்கேன். `மெட்டி ஒலி', `நாதஸ்வரம்'னு சில சீரியல்கள்லயும், `எம் மகன்', `வேலைக்காரன்'னு சில படங்கள்லயும் அவர் நடிச்சார். வாய்ப்புத்தேடி, நீண்ட வருடங்களாகத் தொடர்ந்து அழைச்சுகிட்டே இருந்தார். ஆனாலும், அவருக்குச் சரியான வாய்ப்புகள் வராததால, ரொம்பவே மன வருத்தத்தில் இருந்தார். கடந்த சில வருடங்களாகவே பொருளாதார ரீதியா குடும்பத்தை நடத்துறதுல சிரமப்பட்டோம். `இந்தத் துறையில நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். நாம வேற ஏதாவது தொழில் பண்ணலாம். நடிப்புத் துறையில இருந்து வெளிய வந்திடுங்க'னு அவர்கிட்ட பலமுறை சொல்வேன். `நான் வாழ்ந்தாலும், செத்தாலும் நடிப்புத்துறையிலதான் இருப்பேன். இந்த ஃபீல்டை விட்டு வந்தா, என் உயிரே போயிரும்'னு சொல்லுவார். 

விஜயராஜன்

இந்நிலையில, `ஃப்ரெண்ட்ஸ் சிலர் தீபாவளி பண்டிகைக்காக பழநி வந்திருக்காங்க. தீபாவளி முடிஞ்சுதான் எனக்கும் ஷீட்டிங். அதனால, ஊருக்குப் போறேன்'னு தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே பழநிக்குக் கிளம்பிட்டார். நான் தீபாவளிக்கு முந்தின சனிக்கிழமை சென்னையில இருந்து பழனிக்குக் கிளம்பினேன். அந்த நாளில், பலமுறை எங்கிட்ட போன்ல பேசியவர், `நீ வந்த பிறகு உன்னையும் குழந்தையையும் பார்த்தப் பிறகுதான் தூங்குவேன்'னு சொன்னார். திடீர்னு அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருக்கு. உடனே என் மாமனார் குடும்பத்தினர் கணவரை ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப்போயிருக்காங்க. ட்ரீட்மென்ட் நடந்துகிட்டு இருக்கும்போதே, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கு. ஹாஸ்பிட்டலயே அவர் உயிரிழந்துட்டார்" என்கிற ராமலட்சுமியின் குரல் உடைகிறது. விஜயராஜன்

சிறிது மௌனத்துக்குப் பிறகு பேசியவர், ``ஹாஸ்பிட்டல்ல இருந்து அவரோட உடலை வீட்டுக்கு எடுத்துட்டு வந்துட்டுட்டாங்க. இந்த இடைப்பட்ட நேரத்துல அவருக்குப் பலமுறை போன் பண்ணியும், அவர் போன் எடுக்கலை. ஒருவேளை தூங்கியிருப்பார்னு நினைச்சுகிட்டுதான், நானும் குழந்தையும் இரவு 1 மணி வாக்கில் பழநி வந்தோம். வீட்டுல ஒரே அழுகைச் சத்தம். பண்டிகை உற்சாகத்தில் மகிழ்ச்சியா வரவேற்பாங்கனு நினைச்சா, குடும்பத்தினர் எல்லோரும் அழுகையுடன் என்னை வரவேற்றப்போ எனக்கு ஒண்ணுமே புரியலை. என்னைப் பார்த்த பிறகுதான் தூங்குவேன்னு சொன்ன என் கணவர், பேச்சு மூச்சில்லாம சடலமாக இருந்தார். மனைவியா எனக்கு எப்படி இருந்திருக்கும்னு நினைச்சுப் பாருங்க. அந்த நிமிடத்தை என்னால வார்த்தைகளில் விவரிக்க முடியலைங்க. 

மகள் ஐஸ்வர்யா, அப்பா மேல அளவுகடந்த அன்பு வெச்சிருக்கா. அவர் இறந்துட்டார்ங்கிறதைப் பொண்ணு இன்னும் உணரலை. அவரோட இறுதிச்சடங்கு நடக்கும்போதுகூட, அவர் பூத உடல் பக்கத்துலகூட பொண்ணு வரலை. கடைசியா அப்பாவின் முகத்தையும் அவ பார்க்கலை. மகளுக்கு என் கணவரின் இறப்பை எப்படிப் புரியவைச்சு, அவளை ஆளாக்கப்போறேன்னு தெரியலை. என் கணவர் நல்லா நடிப்பார். அவர் திறமைக்குப் பெரிசா அங்கீகாரம் எதுவும் கிடைக்கலை. அதனால எனக்கும் நிறைய வருத்தமுண்டு. என் மாமனார் மற்றும் பெற்றோர் குடும்பம் பெரிய வசதியெல்லாம் இல்லை. இனி எப்படி இரு வீட்டுக் குடும்பமும் இயங்கப்போகுதுனு தெரியலை. திசை தெரியாத இடத்தில் அடுத்து என்ன பண்றதுனு தெரியாத சூழல்ல இருக்கிறோம். இனி நானும் பழநிக்கே வந்திடலாம் முடிவு பண்ணியிருக்கேன். அவர் இறப்பைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சின்னத்திரை நடிகர்கள் சிலர், அவருக்கு அஞ்சலி செலுத்த வந்தாங்க. சின்னத்திரை நடிகர் சங்கத்தின் சார்பில் உதவி செய்றதாவும் சொல்லியிருக்காங்க. அப்படி ஏதாச்சும் உதவி கிடைச்சா பயனுள்ளதா இருக்கும்" என்று கண்ணீருடன் முடித்தார், ராமலட்சுமி.


டிரெண்டிங் @ விகடன்