பெரியாரையும் சாதிக்குள் அடைக்கிறதா தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்? | TNPSC question paper mentions Periyar's name with his caste identity

வெளியிடப்பட்ட நேரம்: 12:09 (13/11/2018)

கடைசி தொடர்பு:12:47 (16/11/2018)

பெரியாரையும் சாதிக்குள் அடைக்கிறதா தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்?

குரூப்-2 பணிகளுக்கான எழுத்துத் தேர்வை நேற்று நடத்தியது. இந்தத் தேர்வுக்கான கேள்வித்தாளில் ‘திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார்?’ என்ற கேள்விக்கு, பதிலாகக் கொடுக்கப்பட்டிருந்த விடைகளில் பெரியாரின் பெயரை குறிப்பிடும்போது, அவரின் பெயருக்குப் பின்னால் சாதிய அடையாளத்தைக் குறிப்பிட்டுள்ளது எதைக் குறிப்பிடுகிறது?

பெரியாரையும் சாதிக்குள் அடைக்கிறதா தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்?

" '.வெ.ராமசாமி நாயக்கர்’ எனும் நான் இன்றுமுதல் ‘ஈ.வெ.ராமசாமி' என அழைக்கப்படுவேன்" என்று தந்தை பெரியார், கடந்த 1929-ம் ஆண்டு நடந்த செங்கல்பட்டு மாநாட்டில் தீர்மானமாகக் கொண்டுவந்தார். அதே மாநாட்டில்  பெரியாரோடு இணைந்து செளந்தரபாண்டிய நாடார், விருதுநகர் ராமசாமி நாடார் உள்ளிட்ட பல தலைவர்களும் பெரியாரின் தொண்டர்கள் பலரும் தங்களின் பெயருக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயரை நீக்கிக் கொண்டனர். இந்த நிகழ்வின் தொடர்ச்சிதான், இன்று தமிழகத்தை இந்தியாவின் மற்ற மாநிலங்களிடம் இருந்து வேறுபடுத்திக் கொண்டிருக்கிறது.

பெரியாரையும் சாதிக்குள் அடைக்கிறதா தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்?

கல்வியறிவில் முதலிடத்தை வகிக்கும் இடதுசாரிகள் ஆட்சி செய்யும் கேரளா போன்ற மாநிலங்களில்கூட, அரசு ஆவணங்களில் மக்களின் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயர்கள் குறிப்பிடப்பட்டு வருகின்றன. ஆனால், தமிழக அரசின் அனைத்து  ஆவணங்களிலும் பெயருக்குப் பின்னால் இருந்த சாதியின் பெயர் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுகீட்டை 1990-ம் ஆண்டில் மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசு அமல்படுத்தியது. ஆனால், தமிழகத்தில் அரசுத் துறைகளில் வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீட்டை நீதிக் கட்சி ஆட்சியில் இருந்த காலத்திலிருந்தே கொண்டுவந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகமாக மாற்றிய பெரியார், 1950-களில் இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்தபோது, அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தியதுடன், இடஒதுக்கீட்டை தமிழக மக்களுக்காகப் பெற்றுத் தந்தார்.

கலி.பூங்குன்றன்

இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மாநிலம் முழுவதும் குரூப்-2 பணிகளுக்கான எழுத்துத் தேர்வை நேற்று நடத்தியது. இந்தத் தேர்வுக்கான கேள்வித்தாளில் ‘திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார்?’ என்ற கேள்விக்கு, பதிலாகக் கொடுக்கப்பட்டிருந்த விடைகளில் பெரியாரின் பெயரை குறிப்பிடும்போது, அவரின் பெயருக்குப் பின்னால் சாதிய அடையாளத்தைக் குறிப்பிட்டுள்ளது. "இந்தச் செயலுக்கு டி.என்.பி.எஸ்.சி. மன்னிப்பு கோரியிருந்தாலும் இந்த நிகழ்வு தமிழக அரசின் கவனக்குறைவையே காட்டுகிறது" என பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியுள்ளனர்.

அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில் பெரியார் கொண்டுவந்த தமிழ் மொழியின் எழுத்துச் சீர்திருத்தத்தை அங்கீகரித்து, அதற்கான அரசாணையை வெளியிட்டார். எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தவரின் பெயரை எழுதும்போது, எழுத்துப் பிழையுடன் எழுதியதன் பின்னணியில் உள்நோக்கம் உள்ளது என அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

நாஞ்சில் சம்பத்

இதுபற்றிப் பேசிய திராவிடர் கழகத் துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், “குடியரசு இதழில் இருந்து தந்தை பெரியார், தன் பெயருக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயரை 1927-ம் ஆண்டிலேயே நீக்கிவிட்டார். 1929-ம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த மாநாட்டில் அதற்கான தீர்மானத்தைக் கொண்டுவந்தார். பெயருக்குப் பின்னால் இருந்த சாதிப்பெயரை நீக்கி, தமிழகமே அந்தத் தீர்மானத்தை பின்தொடர்ந்தது.  இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லாத வகையில் தமிழகத்தில்தான், தங்களின் சாதிப் பெயரைச் சொல்ல மக்கள் கூச்சப்படும் நிலை உருவானது. ஆனால், தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பெரியாருக்கு சாதிய முலாம் பூச முயல்வது விஷமத்தனமானது" என்றார்.

இதுகுறித்துப் பேசிய நாஞ்சில் சம்பத், "தந்தை பெரியாரின் பெயரைச் சாதிய வன்மத்தோடும், ‘ஈ’ நெடிலுக்குப் பதில் ‘இ’ குறிலைப் பயன்படுத்தியது அவரைத் திட்டமிட்டு அவமானப்படுத்தும் வகையிலும் மேற்கொள்ளப்பட்ட செயலாகும். தமிழகத்தில் ஏற்கனவே ஒரு கும்பல் பெரியாரின் பெயரை அவமானப்படுத்த அலைந்து கொண்டிருக்கிற நிலையில், இப்போது அந்தக் கும்பல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தையும் ஆக்கிரமித்து விட்டனரா என்ற ஐயம் எழுகிறது. பெரியார் என்பவர் ஆகாயம். அவரை யாராலும் அழுக்காக்க முடியாது. சாதி எனும் நாகப் பாம்பை சாகும்வரை கைத்தடி கொண்டு அடித்தவர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தன் செயலுக்கு மன்னிப்புக் கேட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்வு நடத்தும் அமைப்பானது, யாருடைய பசிக்கோ இரையாகிவிட்டது. தமிழ்நாட்டின் இன்றைய இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள பெரியார் தேவைப்படுகிறார். மானமுள்ள தமிழர்களின் சார்பில் டி.என்.பி.எஸ்.சி-யின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றேன்” என்றார் ஆவேசமாக.


டிரெண்டிங் @ விகடன்